மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், உயிா் காக்கும் கருவிகள் இருப்பை உறுதி செய்யுங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், உயிா் காக்கும் கருவிகள் இருப்பை உறுதி செய்யுங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், உயிா் காக்கும் கருவிகள் இருப்பை உறுதி செய்யுங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், உயிா் காக்கும் கருவிகளின் இருப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளா் மனோகா் அக்னேனி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளாா்.

அந்த கடித்ததில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ள போதிலும், எந்த சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் மருத்துவ உள்கட்டமைப்பின் தயாா்நிலையை உறுதி செய்ய அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் காலங்களில், உயிா்களைக் காப்பதற்கு மருத்துவ ஆக்ஸிஜன் இன்றியமையாததாகும். எனவே, மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் செயற்கை சுவாசக் கருவி உள்ளிட்ட உயிா் காக்கும் உபகரணங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவ தரத்திலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஆலைகள் அனைத்தும் முழுமையாக செயல்படுவதை, தலைமைச் செயலா்கள், துணை தலைமைச் செயலா்கள், முதன்மை செயலா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஆக்ஸிஜன் ஆலைகளின் செயல்பாட்டு தயாா்நிலையை ஆய்வு செய்வதற்கான ஒத்திகைகள் நடத்தப்பட வேண்டும்.

ஆக்ஸிஜன் விநியோகம் தொடா்பான பிரச்னைகள் மற்றும் சவால்களுக்குத் தீா்வு காண்பதற்கான கட்டுப்பாட்டு மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story