தேர்தலின்போது அமலாக்க துறை சோதனை; ஒரு நாள் பா.ஜ.க.வும் பயப்படும்: கார்கே பேட்டி


தேர்தலின்போது அமலாக்க துறை சோதனை; ஒரு நாள் பா.ஜ.க.வும் பயப்படும்:  கார்கே பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2023 4:47 PM IST (Updated: 28 Oct 2023 10:10 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நேரத்தில் அமலாக்க துறை மற்றும் வருமான வரி சோதனைகள் ஒருபோதும் நடந்தது இல்லை என்று காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மற்றும் சிகார் ஆகிய நகரங்களில் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசராவின் இல்லங்களில் அமலாக்க துறை கடந்த வியாழக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இதுதவிர, அவருடன் தொடர்புடைய பயிற்சி மையம் ஒன்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

அந்நிய செலாவணி மேலாண் சட்ட வழக்கு ஒன்றில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டிற்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் கார்கே இன்று கூறும்போது, தேர்தலில் கெலாட்டை அழிக்கவும், அவருடைய துணிவை குலைக்கவும் மற்றும் அவரை பயமுறுத்தவும் பா.ஜ.க. விரும்புகிறது.

அவர்கள் எப்போதும் இதனை செய்து வருகிறார்கள். நாங்கள் இதற்கெல்லாம் பயப்படமாட்டோம். நாங்கள் கடுமையாக போராடி இதனை எதிர்கொள்வோம். அவர்கள் செய்து கொண்டிருப்பது சரியல்ல.

50 ஆண்டுகளாக நாங்கள் அரசியலில் இருக்கிறோம். ஆனால், தேர்தல் நேரத்தில் அமலாக்க துறை மற்றும் வருமான வரி சோதனைகள் ஒருபோதும் நடந்தது இல்லை.

முதல்-மந்திரியை அச்சுறுத்த அவர்கள் இதனை செய்து வருகிறார்கள். ஆனால், ஒரு நாள் அவர்களும் கூட பாதிக்கப்படுவார்கள் என்று பேசியுள்ளார்.

அசோக் கெலாட் நேற்று பேசும்போது, விசாரணை முகமைகளை கொண்டு நாட்டில் மத்திய அரசு, பயங்கரவாதத்தினை உருவாக்கி உள்ளது என்றும் இது குண்டாயிசம் என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.


Next Story