பால்டிமோர் பாலத்தில் மோதிய கப்பலில் இந்தியர்கள் நலமாக இருக்கிறார்கள்: வெளியுறவுத்துறை அமைச்சகம்


பால்டிமோர் பாலத்தில் மோதிய கப்பலில் இந்தியர்கள் நலமாக இருக்கிறார்கள்: வெளியுறவுத்துறை அமைச்சகம்
x

கப்பலில் உள்ள இந்தியர்களுடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது.

புதுடெல்லி:

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள படாப்ஸ்கோ ஆற்றின்மீது 2.6 கிமீ நீளமுள்ள, நான்கு வழிச்சாலை கொண்ட பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் உள்ளது. கடந்த செவ்வாய்கிழமை அதிகாலையில் ஆற்றில் வந்துகொண்டிருந்த 984 அடி நீளமுள்ள 'டாலி' என்ற சரக்கு கப்பல், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கப்பலும் சேதமடைந்தது.

பாலத்தில் பராமரிப்பு பணி செய்துகொண்டிருந்த 8 ஊழியர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களில் 2 பேர் மீட்கப்பட்டனர். மற்ற 6 பேரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கப்பலில் 20 இந்தியர்ககள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு மட்டும் லேசாக காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எங்களுக்கு வந்த தகவலின்படி, பால்டிமோர் பாலத்தில் மோதிய சரக்கு கப்பலில் மொத்தம் 21 பேர் இருந்தனர். அவர்களில் 20 பேர் இந்தியர்கள். அனைவரும் நல்ல நிலையில், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சில தையல்கள் போடவேண்டியிருந்தது. சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் கப்பலுக்கு சென்றுள்ளார். கப்பலில் உள்ள இந்தியர்களுடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story