உணவு தேடி வந்தபோது கிணற்றுக்குள் விழுந்து தவித்த யானை பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி மீட்பு
நேற்று முன்தினம் இரவு அட்டப்பாடி வட்ட லக்கி அருகே கேரள-தமிழக எல்லையில் உள்ள வல்லம் புழக்கரா பகுதிக்குள் உணவு தேடி காட்டு யானைகள் நுழைந்தன.
பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டு யானை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி விளைநிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அட்டப்பாடி வட்ட லக்கி அருகே கேரள-தமிழக எல்லையில் உள்ள வல்லம் புழக்கரா பகுதிக்குள் உணவு தேடி காட்டு யானைகள் நுழைந்தன. அப்போது அங்குள்ள தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் 10 வயது ஆண் யானை தவறி விழுந்தது. பின்னர் யானை வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது, கிணற்றுக்குள் யானை விழுந்து தவிப்பது தெரியவந்தது. இதுகுறித்து அட்டப்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் வனச்சரகர் பிரதீப் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றின் ஒரு பகுதியை இடித்து குழி தோண்டப்பட்டது.
அதன் மூலம் வழி ஏற்படுத்தப்பட்டதை அடுத்து,யானையை கயிறு கட்டி இழுத்து அந்த வழியாக வெளியே மீட்டனர். வெகு நேரம் கிணற்றுக்குள் தவித்ததால் யானை சோர்வாக காணப்பட்டது. இதையடுத்து யானைக்கு கால்நடை டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். பின்னர் உணவு வகைகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு யானையை வனத்துறையினர் அட்டப்பாடி வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.