காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்
குண்டலுபேட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.
கொள்ளேகால்:
குண்டலுபேட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.
காட்டு யானை அட்டகாசம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா கோபால்பூர் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்தப்பகுதியில் காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி மகாதேவப்பா என்பவர், நேற்று முன்தினம் வனப்பகுதியையொட்டி உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார்.
விவசாயி படுகாயம்
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, தோட்டத்துக்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மகாதேவப்பா, அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் காட்டு யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியதுடன், காலால் மிதித்தது. அதில் 2 கால்களிலும் பலத்த காயமடைந்து மகாதேவப்பா அலறினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள், காட்டு யானையை விரட்டியடித்து மகாதேவப்பாவை மீட்டனர்.
பின்னர் அவர்கள், மகாதேவப்பாவை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டு யானை அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.