புதுச்சேரியில் மின் கட்டணம் அதிரடி உயர்வு..!!


புதுச்சேரியில் மின் கட்டணம் அதிரடி உயர்வு..!!
x
தினத்தந்தி 1 Oct 2023 10:33 PM IST (Updated: 1 Oct 2023 10:44 PM IST)
t-max-icont-min-icon

மின் கொள்முதல் விலை ஏற்றத்தை ஈடு செய்யும் பொருட்டு, மின்நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று புதுச்சேரி மின்துறை அறிவித்து உள்ளது.

புதுச்சேரி,

கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய புதுவையில் மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் மின்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் புதுவையில் ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுதோறும் உத்தேச மின் கட்டணம் அறிவிக்கப்படும். தொடர்ந்து ஒழுங்கு முறை ஆணையர் முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு மின் கட்டணம் ஏப்ரல் மாதம் உயர்த்தப்படும்.

இதே போல் நடப்பு ஆண்டுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய புதுவை அரசின் மின்துறை கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளது. அதன்படி 2023-24ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களுக்கான மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

வீடுகளுக்கு 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 25 பைசாவும்,101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 36 பைசாவும், 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு 40 பைசாவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 40 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல் வர்த்தக மின் கட்டணம் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 66 பைசாவும், 101 யூனிட் முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு 77 பைசாவும், 250 யூனிட்டுக்கு மேல் 77 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் தெருவிளக்கு யூனிட்டிற்கு 78 பைசாவும், எல்.டி. தொழிற்சாலை யூனிட்டிற்கு 70 பைசாவும், எல்.டி. தண்ணீர் தொட்டிக்கு யூனிட்டிற்கு 72 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குடிசை தொழிலுக்கு 100 யூனிட் வரை யூனிட்டிற்கு 25 பைசாவும், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டிற்கு 36 பைசாவும், 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை யூனிட்டிற்கு 59 பைசாவும், 300 யூனிட்டிற்கு மேல் யூனிட்டிற்கு 75 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு 60 பைசாவும், எச்.டி. வர்த்தகம் யூனிட்டிற்கு 62 பைசாவும், விளம்பர பலகைகளுக்கு யூனிட்டிற்கு 59 பைசா கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.

இந்த கூடுதல் கட்டணம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





Next Story