பெங்களூருவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்


பெங்களூருவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்
x

பெங்களூருவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்.

பெங்களூரு:

மின்சார ஸ்கூட்டர்

கர்நாடக அரசின் சமூக நலத்துறையின் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு வாரியம் சார்பில் விதான சவுதா மற்றும் எம்.எஸ்.கட்டிடத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச ஸ்கூட்டரை வழங்கி பேசியதாவது:-

கர்நாடகத்தில் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நான் உறுதி பூண்டுள்ளேன். அவர்கள் செய்யும் வேலை முக்கியமானது. நகரங்களை தூய்மைப்படுத்தும் பணியை செய்கிறார்கள். அவர்களின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக அவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

10 நகரங்களுக்கு விஸ்தரிப்பு

வெளிநாடுகளில் துப்புரவு தொழிலாளர்கள் காரில் செல்கிறார்கள். அதே நிலை தற்போது கர்நாடகத்தில் ஏற்படுகிறது. தற்போது அவர்கள் ஸ்கூட்டரில் பயணிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் காரில் செல்லும் நாள் தொலைவில் இல்லை. அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் 10 மாநகரங்களுக்கு விஸ்தரிக்கப்படுகிறது. மொத்தம் 600 பேருக்கு இந்த வகையான ஸ்கூட்டரை வழங்க முடிவு செய்துள்ளோம்.

வரும் நாட்களில் அனைத்து தொகுதிகளுக்கும் தலா 100 ஸ்கூட்டர்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதனால் 25 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story