சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நம்பிக்கை
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிரச்சினைக்கு தீர்வு
கருத்து கணிப்புகள் கூறுவது போல் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றியின் விளிம்பில் இல்லை. கருத்து கணிப்புகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பது எங்களுக்கு தெரியும். பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஆதரவு தேவைப்படாது. ஜெகதீஷ் ஷெட்டர் விலகியதால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர் போட்டியிட்டுள்ள உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
அவரது விலகல் என்பது இயற்கையாக நடைபெற்றது அல்ல. பிற்படுத்தப்பட்ட பிரிவில் சில சமூகங்கள் இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி வந்தன. இந்த பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு கண்டுள்ளோம்.
உள் ஒதுக்கீடு
முன்பு மக்கள்தொகைக்கு ஏற்ப சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தலித் சமூகத்தில் உட்பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். இதற்கு ஒப்புதல் வழங்குமாறு கோரி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளோம். இறுதியாக மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.
லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு புதிதாக பிரிவை ஏற்படுத்தி இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்தியுள்ளோம். எங்கள் அரசு மீதான 40 சதவீத குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகளோ அல்லது ஊடகங்களோ அல்லது ஒப்பந்ததாரர் சங்கமோ ஏதாவது ஒரு ஆதாரத்தை காட்டட்டும். அதற்கு நான் பதிலளிக்கிறேன்.
சரியானது அல்ல
பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. சோனியா காந்தியை விஷக்கன்னி என்று கூறியது சரியானது அல்ல. ஆனால் இந்த விவகாரத்தை கீழ்மட்டத்திற்கு காங்கிரசார் எடுத்து சென்றுள்ளனர். இந்த விவகாரத்தை முதலில் ஆரம்பித்ததே காங்கிரஸ் தான். அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். அதனால் அந்த விஷக்கன்னி விமர்சனம் வந்தது.
எடியூரப்பாவுக்கு நான் லிங்காயத் சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவர் என்று சொல்ல முடியாது. இந்த சமூகத்தை சேர்ந்த ஏராளமான தலைவர்கள் எங்கள் கட்சியில் உள்ளனர். எல்லோரும் தலைவர்களே. எடியூரப்பாவுக்கு அடுத்த தலைவர் என்பது கிடையாது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.