தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை; கர்நாடக கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திர சோழன் பேட்டி
தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திர சோழன் கூறி உள்ளார்.
பெங்களூரு:
தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திர சோழன் கூறி உள்ளார்.
தீவிர கண்காணிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநில கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திர சோழன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்கான முழு முயற்சிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.
3½ லட்சம் அரசு அதிகாரிகள்
தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிரசாரம் ஓய்வுபெறுகிறது. அதன்பின்னர் வேட்பாளர்கள் 5-க்கும் குறைவான தொண்டர்களுடன் சென்று வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்யலாம். ஆனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதமாக செயல்பட கூடாது. தேர்தல் பணிகளுக்கான பணியில் சுமார் 3½ லட்சம் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேர்தல் நாள் மற்றும் வாக்கு எண்ணும் நாட்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் சில பகுதிகளில் 'பிங்க்' நிற வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் ஊழியர்கள் மட்டுமே பணி செய்வார்கள். கர்நாடகம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அதிகாரிகள் பணியில் உள்ளனர்.
144 தடை உத்தரவு
இதுவரை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.330 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள், ரொக்கம், தங்கம், வெள்ளி பொருட்கள், மதுபானங்கள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு போலீசார் குழுக்களாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நாளான 10-ந் தேதி வாக்குச்சாவடிகளை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும்.
அதன்படி 100 மீட்டர் எல்லைக்குள் கூட்டமாக நடந்து செல்லவோ, நின்று பேசவோ அனுமதி கிடையாது. கர்நாடக போலீசாருக்கு, பொது அமைதியை பாதுகாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்கும் வசதி கர்நாடகத்தில் நடப்பு சட்டசபை தேர்தலில் முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 70 ஆயிரம் வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை வீட்டில் இருந்தே பதிவு செய்துள்ளனர். கர்நாடக தேர்தலை அமைதியான முறையில் மேற்கொள்வதற்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகள் கடுமையான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.