காங்கிரசை நாட்டை விட்டே விரட்டியடிப்பார்கள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
பஜ்ரங்தள அமைப்பினர் கிளர்ந்து எழுந்தால் காங்கிரசை நாட்டை விட்டே விரட்டியடிப்பார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
உப்பள்ளி:
பஜ்ரங்தள அமைப்பினர் கிளர்ந்து எழுந்தால் காங்கிரசை நாட்டை விட்டே விரட்டியடிப்பார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
தார்வார் மாவட்டத்தில் நேற்று பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-
இட ஒதுக்கீடு
மகதாயி நீரை நரகுந்து, நவலகுந்து பகுதிகளுக்கு கொண்டு வருவது தான் பா.ஜனதாவின் நோக்கம். இதற்காக 20 ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டத்திற்கு ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் தான் குறுக்காக நின்றது. கோவாவில் பேசிய சோனியா காந்தி, கர்நாடகத்திற்கு மகதாயி நீரை வழங்க மாட்டோம் என்று பேசினார். கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு பிரதமர் மோடி அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கு டெண்டரும் இறுதி செய்துள்ளோம். தேர்தல் முடிவடைந்ததும் அந்த திட்ட பணிகள் தொடங்கும். இதற்கு ரூ.500 கோடி வழங்குவதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் நாங்கள் பட்ஜெட்டில் ரூ.1,000 கோடியை ஒதுக்கியுள்ளோம். இந்த பணிகளை 2 ஆண்டுகளில் முடிப்போம். சமூக நீதி பற்றி பேசும் காங்கிரசார், நாங்கள் மேற்கொண்ட இட ஒதுக்கீடு உயர்வை எதிர்க்கிறார்கள்.
விரட்டியடிப்பார்கள்
நாங்கள் அனைத்து சமூகங்களுக்கும் நியாயம் கொடுத்துள்ளோம். ஆனால் காங்கிரசார் பின்வாசல் வழியாக கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். காங்கிரசார் தற்போது பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக கூறியுள்ளனர். பி.எப்.ஐ. அமைப்புடன் பஜ்ரங்தள அமைப்பையும் சேர்த்துள்ளனர். நமது கலாசாரம், நமது வரலாறு, நமது மதத்தை வலுப்படுத்தும் வேலையை பஜ்ரங்தள அமைப்பு செய்கிறது.
அந்த அமைப்பினர் ஹனுமன் பக்தர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் கிளர்ந்து எழுந்தால் காங்கிரசை நாட்டை விட்டே விரட்டியடிப்பார்கள். வட இந்தியாவில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. அதே போல் தென்இந்தியாவின் அஞ்சானத்திரியில் ஆஞ்சனேயா சாமி கோவில் கட்டப்படுகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.