பஞ்சாரா, போவி சமூகங்களுக்கு பா.ஜனதா அநீதி இழைக்கவில்லை; மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி
இட ஒதுக்கீடு விஷயத்தில் பஞ்சாரா, போவி சமூகங்களுக்கு பா.ஜனதா அநீதி இழைக்கவில்லை என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார்.
பெங்களூரு:
இட ஒதுக்கீடு விஷயத்தில் பஞ்சாரா, போவி சமூகங்களுக்கு பா.ஜனதா அநீதி இழைக்கவில்லை என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தவறாக வழிநடத்துகிறது
தலித் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாரா சமூகத்திற்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் காங்கிரஸ் தவறான பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. மேலும் பஞ்சாரா மக்களை காங்கிரஸ் தூண்டி விடுகிறது. கர்நாடக அரசு பஞ்சாரா, போவி உள்ளிட்ட பிரிவுகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 4½ சதவீதமாக உயர்த்தியுள்ளோம் என்பதை அந்த சமூக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சி பஞ்சாரா உள்ளிட்ட பிரிவுகளை தலித் சமூகத்தில் இருந்து நீக்க திட்டமிட்டது. ஆனால் தற்போது அந்த மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துகிறது. கர்நாடக பா.ஜனதா அரசு அந்த சமூக மக்களுக்கு அநீதி இழைக்கவில்லை. அதனால் அவர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள். 17 சதவீத இட ஒதுக்கீடு தலித் சமூகத்தில் 4 முக்கிய பிரிவுகளுக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப பகிா்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
பலமான வாக்கு வங்கி
தலித் இடதுசாரி பட்டியலில் 29 பிரிவுகள் உள்ளன. அவற்றுக்கு 6 சதவீதமும், 25 பிரிவுகளை உள்ளடக்கிய வலதுசாரிக்கு 5½ சதவீதமும், பஞ்சாரா, போவி பிரிவுகளுக்கு 4½ சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தலித் சமூகத்திற்கு மீதமுள்ள ஒரு சதவீதம் வழங்கப்பட்டது. ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி ஆகியோர் கட்சியை விட்டு விலகியதால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தனிப்பட்ட நபர்களுக்கான வாக்கு வங்கி குறைவு தான்.
தொண்டர்களை அடிப்படையாக கொண்ட பா.ஜனதாவுக்கு பலமான வாக்கு வங்கி உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும். நாங்கள் வளர்ச்சி பணிகள் அடிப்படையில் ஓட்டு கேட்கிறோம். பிரதமர் மோடியின் தொடர் பிரசாரங்களால் பா.ஜனதாவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
இவ்வாறு மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார்.