கர்நாடகத்திற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும்; ராகுல் காந்தி வலியுறுத்தல்
கர்நாடகத்திற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி பேச வேண்டும் என்று பிரதமர் மோடியை ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு, மே.2-
கர்நாடகத்திற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி பேச வேண்டும் என்று பிரதமர் மோடியை ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகம் வந்துள்ளீர்கள்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி 2 நாட்கள் கர்நாடகத்தில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று துமகூருவில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது:-
நீங்கள் (பிரதமர் மோடி) தேர்தலுக்காக கர்நாடகம் வந்துள்ளீர்கள். ஆனால் இங்கு கர்நாடகம் பற்றி பேசுவது இல்லை. நீங்கள் உங்களை பற்றியே பேசுகிறீர்கள். கடந்த 3 ஆண்டுகளில் நீங்கள் கர்நாடகத்திற்கு என்ன செய்தீர்கள் என்பது குறித்து பேச வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்பது குறித்தும் பேச வேண்டும். இளைஞர்கள், கல்வி, சுகாதாரத்திற்கு என்ன செய்வீர்கள், ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்பது குறித்து பேச வேண்டும்.
முயற்சி செய்யுங்கள்
இந்த சட்டசபை தேர்தல் உங்களை பற்றியது அல்ல. இது கர்நாடக மக்கள், அவர்களின் எதிர்காலத்தை பற்றி நடைபெறும் தேர்தல். காங்கிரஸ் தன்னை 91 முறை அவமதித்து பேசியதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் கர்நாடகத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது குறித்து நீங்கள் பேசவே இல்லை. அடுத்ததாக நீங்கள் (பிரதமர் மோடி) பேசும் பேச்சிலாவது, நீங்கள் என்ன செய்தீர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீா்கள் என்பது குறித்து பேச வேண்டும்.
நாங்கள் மேடையில் பேசும்போது, எங்கள் கட்சியின் தலைவர்கள் அனைவரின் பெயரையும் குறிப்பிடுகிறோம். ஆனால் நீங்கள் (மோடி) பேசும்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோரின் பெயரை கூட குறிப்பிடுவது இல்லை. உங்களின் பேச்சு உங்களை பற்றியது மட்டுமாகவே உள்ளது. பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் பெயரை ஓரிரு முறையாவது குறிப்பிட்டால், அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதனால் அவர்களின் பெயரை உங்களின் பேச்சில் குறிப்பிட முயற்சி செய்யுங்கள்.
இலவச மின்சாரம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்படும். வேலையில்லா படித்த பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3,000, பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு தலா ரூ.1,500, ரேஷன் கடைகளில் ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
கர்நாடகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு பணிக்கும் 40 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது. பொதுமக்களின் நலனுக்காக பாடுபட வேண்டியவர்கள், ஏழை மற்றும் பொதுமக்களின் பாக்கெட்டுகளில் கொள்ளையடித்துள்ளனர். கர்நாடகத்தில் ஊழல், 40 சதவீத கமிஷன் குறித்து பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும். அதன் மீது பிரதமர் மோடி ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளாரா?. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பதிலளிக்க வேண்டும்
இதுகுறித்து கர்நாடக மக்களுக்கு மோடி பதிலளிக்க வேண்டும். மத்திய அரசின் வருவாயில் கர்நாடகத்திற்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது குறித்தும் அவர் கூற வேண்டும். மராட்டியம், கோவா, கர்நாடகம் இடையேயான நதி நீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மோடி பதிலளிக்க வேண்டும். கர்நாடக மக்கள் 40 சதவீத கமிஷன் பா.ஜனதாவுக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு 150 இடங்கள் வழங்க வேண்டும். இதனால் பா.ஜனதாவினரால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அவர்களால் வீழ்த்த முடியாது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.