ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம்; பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
கர்நாடகத்தில் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு தினமும் அரை லிட்டர் பால் வழங்கப்படும் என்றும் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு தினமும் அரை லிட்டர் பால் வழங்கப்படும் என்றும் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்
வருகிற 10-ந்தேதி சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி கர்நாடக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களின் வருகை, குற்றச்சாட்டுகளால் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளன. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தை முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 6 முக்கியமான வாக்குறுதிகளை அறிவித்துவிட்டது.
காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்)
அதாவது 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 6 முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு 5 சமையல் சிலிண்டர்கள் இலவசம் என்றும், விவசாயிகளை திருமணம் செய்யும் பெண்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்குவது உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அந்த அறிக்கையை பெங்களூருவில் வெளியிட்டுள்ளார்.
ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
பொது சிவில் சட்டம்
* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 3 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இது உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகையின்போது வழங்கப்படும்.
* நகரங்களில் ஒவ்வொரு வார்டிலும் 'அடல் ஆகார கேந்திரா' திட்டத்தின் கீழ் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டு குறைந்த விலையில் தரமான உணவு பொருட்கள் வழங்கப்படும்.
* 'போஷனே' திட்டத்தை தொடங்கி அதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் நந்தினி பால் இலவசமாக வழங்கப்படும். மேலும் அந்த குடும்பங்களுக்கு 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும்.
* கர்நாடகத்தில் பொது சிவில் சட்டம் உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்.
* 'சர்வரிகு சூரு யோஜனே' திட்டத்தின் கீழ் 10 லட்சம் வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டு அதை வீடற்ற ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
* 'ஒனக்கே ஒபவ்வா சாமாஜிக நியாய நிதி' திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் தலித், பழங்குடியின குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
மருத்துவ பரிசோதனை
* அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வாழ்க்கையை எளிமையாக்க கர்நாடக அடுக்குமாடிகள் உரிமையாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய கர்நாடக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நல குழு அமைக்கப்படும்.
* விஸ்வேசுவரய்யா வித்யா யோஜனே திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஐ.ஏ.எஸ்., கே.ஏ.எஸ்., வங்கி அதிகாரி, அரசு வேலைக்கு செல்ல விரும்பும் படித்த இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* 'மிஷன் ஸ்வஸ்த்தயா' திட்டத்தின் கீழ் நகரங்களின் வார்டுகளில் நம்ம கிளினிக், ஆய்வு கூட வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை மூத்த குடிமக்களுக்கு உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.
* பெங்களூரு நகரை அடுத்த தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது பெங்களூருவை மாநில தலைநகர் மண்டலமாக அறிவித்து ஒரு முழுமையான தொழில்நுட்பம் சார்ந்த நகரமாக வளர்ச்சி அடைய செய்யப்படும். இதன் மூலம் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவது, நல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது, டிஜிட்டல் புதுமைகளை புகுத்துவதற்காக பெங்களூருவை உலக குவிமையமாக ஆக்குவதற்கான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்
* மின்சார வாகனங்களின் முதன்மையான மையமாக கர்நாடகத்தை மாற்றுவோம். இதற்காக சார்ஜிங் நிலையங்கள், 1,000 புத்தாக்க தொழில்களுக்கு உதவுதல், பி.எம்.டி.சி. பஸ்களை மின்சார பஸ்களாக மாற்றுவது, பெங்களூருவுக்கு அருகே மின்சார வாகன நகரத்தை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
* ரூ.30 ஆயிரம் கோடி செலவில் கே-அக்ரி நிதி திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம் நுண்ணிய குளிர்பதன நிலையங்கள் அமைப்பது, அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் விவசாய பதப்படுத்தும் நிலையங்கள் உருவாக்குவது, வேளாண் சந்தைகளை டிஜிட்டல் மயமாக்குவது, 5 விவசாய தொழிற்பேட்டைகளை அமைப்பது, 3 புதிய உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* கா்நாடகத்தை இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலமாக உருவாக்க ரூ.1,500 கோடியில் திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
* பாலுக்கான ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.7 ஆக உயர்த்தப்படும்.
* குசும் திட்டத்தின் கீழ் சூரியசக்தி மின் மோட்டார்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 80 சதவீத மானியம் வழங்கப்படும்.
* ஏழை மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் பெங்களூரு மட்டுமின்றி பிற பெரிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
கர்நாடக உதவி மையம்
* விதவை பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.800-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* ராமேசுவரம், வேளாங்கண்ணி, திருப்பதி, அயோத்தியா, வாரணாசி போன்ற புண்ணிய தலங்களில் கர்நாடக உதவி மையம் தொடங்கப்படும்.
* லண்டனில் இருப்பது போன்ற போக்குவரத்து வசதிகள் பெங்களூருவில் ஏற்படுத்தப்படும்.
* நியூயார்க் நகரில் இருப்பது போல் பன்முக போக்குவரத்து மையமாக பெங்களூரு மாற்றப்படும்.
* பெங்களூருவில் அனைத்து தெருக்களிலும் முகத்தை அடையாளம் காணும் வகையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
இவைகள் உள்பட பல அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளது.