புதிய தொழில்நுட்ப உதவியுடன் பிரசாரம் செய்யும் காங்கிரஸ் வேட்பாளர்
புதிய தொழில்நுட்ப உதவியுடன் காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம் செய்கிறார்.
உப்பள்ளி:
உப்பள்ளி-தார்வார் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வினய்குல்கர்னி போட்டியிடுகிறார். இவர் பா.ஜனதா பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் கூலிப்படையை ஏவி கொன்றதாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது நிபந்தனை ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார். அவர் சாட்சிகளை கலைக்க நேரிடும் என கருதி தார்வார் மாவட்டத்திற்குள் செல்ல தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே அவர் காங்கிரஸ் சார்பில் உப்பள்ளி-தார்வார் புறநகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், தன்னை பிரசாரம் செய்ய உப்பள்ளி-தார்வார் நகருக்குள் நுழைய அனுமதி கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் கோர்ட்டு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் அவருக்கு ஆதரவாக வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். தான் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்ட வினய்குல்கர்னி வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் பிரசாரம் செய்து வருகிறார்.
தற்போது அவர் புதிய தொழில்நுட்ப உதவியுடன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது ஏ.ஆர். (ஆக்மென்டட் ரியாலிட்டி) என்ற செயலி மூலம் சமூகவலைத்தளங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பத்தின் கீழ் வீடியோக்கள், புகைப்படங்கள் டிஜிட்டல் வடிவில் அனைவரையும் சென்றடையும். இந்த முறையை வினய்குல்கர்னி கையாண்டு தனது தொகுதி மக்கள் மத்தியில் தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், பார்வையாளர்கள் கேமராவை ஆன் செய்தால், களத்தில் நின்று வேட்பாளர் பேசுவதை போன்ற உணர்வை கொடுக்குமாம். இதனால் வினய் குல்கர்னியின் இந்த புதிய தொழில்நுட்ப பிரசாரம் வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்றை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த நடைமுறையை பின்பற்றி பிரசார பாணியை மாற்ற பல வேட்பாளர்களும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.