காங்கிரஸ் சார்பில் 2-வது கட்டமாக 42 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் 2-வது கட்டமாக 42 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் 2-வது கட்டமாக 42 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
42 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே ஜனதாதளம் (எஸ்) கட்சி கடந்த பிப்ரவரி மாதத்திலேயே 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சியும் கடந்த மார்ச் 25-ந்தேதி 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. அதில் முக்கிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதாவது, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் - கனகபுரா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா - வருணா, அக்கட்சியின் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி - பி.டி.எம்.லே-அவுட், செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி - யமகனமரகடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். மேலும் அக்கட்சியில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதே தொகுதிகளில் மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 42 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
முன்னாள் மந்திரிகள்
இதில் முக்கியமாக பா.ஜனதாவில் இருந்து வந்த எம்.எல்.ஏ. என்.ஒய்.கோபாலகிருஷ்ணா, எம்.எல்.சி. பாபுராவ் சின்சனசூர், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து வந்த எஸ்.ஆர்.சீனிவாஸ், தேவராஜ், சித்தேகவுடா, வீரேந்திரா ஆகியோருக்கும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி தரம்சிங்கின் இன்னொரு மகன் விஜய் தரம்சிங்கிற்கும் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ள முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு தார்வாரில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக சிக்காவியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வினய் குல்குர்னிக்கு தார்வாரில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்கி உள்ளது. மேலும் அவர் தார்வாருக்குள் செல்ல அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதல்-மந்திரியாக இருந்தபோது சித்தராமையா மந்திரிசபையில் இடம் பெற்று இருந்த முன்னாள் மந்திரிகள் ஆஞ்சனேயா, கிம்மனே ரத்னாகர், சந்தோஷ் லாட் ஆகியோருக்கும் இந்த பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேல்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. அதற்கு பதிலாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், சர்வோதயா கர்நாடக கட்சியின் தலைருமான புட்டண்ணய்யாவின் மகன் தர்ஷனுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கோலார் தொகுதி
சித்தராமையாவின் தற்போதைய தொகுதியான பாதாமியில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 2-வதாக கோலாரில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் கோலார் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. சித்தராமையா 2-வது தொகுதியில் போட்டியிடுவதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரோ கோலாரில் போட்டியிட்டே தீர வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளார். அவரை சமாதானப்படுத்துமாறு ராகுல் காந்தியை மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 58 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
பா.ஜனதா வேட்பாளர் பட்டியல்
ஆனால் ஆளுங்கட்சியான பா.ஜனதா கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. அக்கட்சி மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு பதிலாக புதுமுகங்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிகிறது. இதனால் அதிருப்தி எழலாம் என கருதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதை அக்கட்சி இழுத்தடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் அக்கட்சி முதற்கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. அதுபற்றி மாவட்ட அளவில் நிர்வாகிகளிடம் அக்கட்சி மாநில தலைவர்கள் கருத்து கேட்டுள்ளனர். இந்த தகவல்களை அவர்கள் மேலிட தலைவர்களிடம் எடுத்துக்கூற உள்ளனர். இதுவரை 125 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.
எப்போது வெளியீடு?
அவர்கள் வேட்பாளர் பட்டியலை மேலிட தலைவர்களிடம் கொடுக்கிறார்கள். டெல்லியில் நாளை (8-ந்தேதி) நடைபெறும் தேர்தல் குழு கூட்டத்தில் அந்த பட்டியலுடன், மேலிடம் எடுத்த சர்வே அறிக்கை, பூத்கமிட்டி நிர்வாகிகள் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்து வேட்பாளர்களை இறுதி செய்து அக்கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் காப்பக பொன் விழாவில் பங்கேற்க நாளை (சனிக் கிழமை) மைசூருவுக்கு வருகிறார். அநேகமாக அவர் வந்து சென்ற பிறகு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என தெரிகிறது. வருகிற 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள் விவரம் வருமாறு:-
ெதாகுதி - வேட்பாளர் பெயர்
1. நிப்பானிகாகசாகேப் பட்டீல்
2. கோகாக்மகாந்தேஷ் கடாடி
3. கித்தூர்பாபாசாகேப் பட்டீல்
4. சவதத்தி எல்லம்மாவிஸ்வாஸ் வசந்த் வைத்தியா
5. முதோள் (எஸ்சி.)ஆர்.பி.திம்மாபூர்
6. பீலகிஜே.டி.பட்டீல்
7. பாதாமிபீம்சென் சிம்மனகட்டி
8. பாகல்கோட்டைஎச்.ஒய்.மேட்டி
9. விஜயாப்புரா நகர்அப்துல் அமீத் காஜாசாகேப் முஷரப்
10. நாகதான் (எஸ்.சி.)விட்டல் காடாகத்தோன்ட்
11. அப்சல்புராஎம்.ஒய்.பட்டீல்
12. யாதகிரிசன்னாரெட்டி பட்டீல் டன்னூர்
13. குருமித்கல்பாபுராவ் சின்சனசூர்
14. கலபுரகி தெற்குஅல்லம்பிரபு பட்டீல்
15. பசவ கல்யாண்விஜய் தரம்சிங்
16. கங்காவதிஇன்பால் அன்சாரி
17. நரகுந்துபி.ஆர்.யவகல்
18. தார்வார்வினய் குல்கர்னி
19. கல்கட்டகிசந்தோஷ் லாட்
20. சிர்சிபீமண்ணா நாயக்
21. எல்லாப்புராவி.எஸ்.பட்டீல்
22. கூட்லகி (எஸ்.டி.)டாக்டர் சீனிவாஸ் என்.டி.
23. முலகால்மூரு (எஸ்.டி.)என்.ஒய்.கோபாலகிருஷ்ணா
24. சித்ரதுர்காகே.சி.வீரேந்திரா
25. ஒலல்கெரே (எஸ்.சி.)ஆஞ்சனேயா
26. சன்னகிரிபசவராஜூ சிவகங்கா
27. தீர்த்தஹள்ளிகிம்மனே ரத்னாகர்
28. உடுப்பிபிரசாத்ராஜ் கஞ்சன்
29. கடூர்கே.எஸ்.ஆனந்த்
30. துமகூரு நகர்இக்பால் அகமது
31. குப்பிஎஸ்.ஆர்.சீனிவாஸ்
32. எலகங்காகேசவ ராஜண்ணா
33. யஷ்வந்தபுரம்பால்ராஜ் கவுடா
34. மகாலட்சுமி லே-அவுட்கேசவ மூர்த்தி
35. பத்மநாபநகர்ராகுநாத் நாயுடு
36. மேல்கோட்டைதர்ஷன் புட்டண்ணாவுக்கு ஆதரவு
(சர்வோதயா கர்நாடக கட்சி)
37. மண்டியாபி.ரவிக்குமார்
38. கே.ஆர்.பேட்டைபி.எல்.தேவராஜ்
39. பேளூர்பி.சிவராம்
40. மடிகேரிடாக்டர் மந்தர்கவுடா
41. சாமுண்டீஸ்வரிசித்தேகவுடா
42. கொள்ளேகால் (எஸ்.சி.)ஏ.ஆர்.கிருஷ்ண மூர்த்தி