அரண்மனை நகரமான மைசூருவை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ்


அரண்மனை நகரமான மைசூருவை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ்
x

அரண்மனை நகரமான மைசூருவை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.

மைசூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக அதிகம் எதிர்பார்க்கப்படும் பகுதியாக மைசூரு மாவட்டம் உள்ளது. முதல்-மந்திரி சித்தராமையா உள்பட ஏராளமான மந்திரிகளை கொடுத்துள்ள இந்த மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தலா 4 தொகுதிகளிலும், பா.ஜனதா 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த முறை மகனுக்காக வருணா தொகுதியை விட்டு கொடுத்து சாமுண்டீஸ்வரியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த சித்தராமையா, இந்த முறை மீண்டும் வருணாவில் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் சித்தராமையாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. மைசூருவில் பலவீனமாக இருந்த பா.ஜனதா கட்சி கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மைசூரு தங்களின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. அரண்மனை நகரமான மைசூருவில் அரியணையில் அமரபோவது யார்? என்று பொறுத்திருந்து பார்ப்போம்....!

சாமுண்டீஸ்வரி-வருணா

கடந்த தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக சித்தராமையா போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்து தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜி.டி.தேவேகவுடா. ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர், மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட பலர் டிக்கெட் கேட்டு கட்சி மேலிடத்தை அணுகி உள்ளனர்.

வருணா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையா. கடந்த தேர்தலில் வருணா தொகுதியை சித்தராமையா தனது மகனுக்காக விட்டு கொடுத்திருந்தார். ஆனால் இந்த முறை வருணா தொகுதியை தனது தந்தைக்காக யதீந்திரா விட்டு கொடுத்துள்ளார். கோலாரில் போட்டியிட சித்தராமையா முடிவு செய்திருந்த நிலையில், கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி வருணாவில் போட்டியிடுகிறார். அவரே வருணா தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் வருணா தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட அபிஷேக் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.

டி.நரசிப்புரா-நஞ்சன்கூடு

டி.நரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த அஸ்வின்குமார் உள்ளார். இந்த முறையும் அந்த தொகுதியில் அஸ்வின்குமாருக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது. கடந்த முறை அஸ்வின்குமாரிடம் தோல்வி அடைந்த முன்னாள் மந்தரி எச்.சி.மகாதேவப்பாவே மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை வெற்றி பெற அவர் தீவிரமாக கள பணியாற்றி வருகிறார். பா.ஜனதா கட்சி பலமான வேட்பாளரை நிறுத்த முயற்சித்து வருகிறது.

நஞ்சன்கூடு தொகுதி எம்.எல்.ஏ.வாக பா.ஜனதாவை சேர்ந்த ஹர்ஷவர்தன் உள்ளார். இடைத்தேர்தலில் பா.ஜனதாவின் சீனிவாச பிரசாத்தை வீழ்த்திய காங்கிரசின் களளே கேசவமூர்த்தி, ஹர்ஷவர்தனிடம் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நஞ்சன்கூடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த துருவநாராயண் டிக்கெட் கேட்டு வந்தார். நஞ்சன்கூடுவில் அவருக்கு வாய்ப்பு வழங்க கட்சி மேலிடமும் முடிவு செய்திருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த மாதம் துருவநாராயண் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால், நஞ்சன்கூடு தொகுதியில் அவரது மகன் தர்ஷன் துருவநாராயணுக்கு காங்கிரஸ் வாய்ப்பு அளித்துள்ளது. பா.ஜனதா சார்பில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள ஹர்ஷவர்தன் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அங்கு வலுவான வேட்பாளரை நிறுத்த ஜனதா தளம்(எஸ்) முயற்சித்து வருகிறது.

உன்சூர்-பிரியப்பட்டணா

உன்சூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மஞ்சுநாத். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவருக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இங்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் சாமுண்டீஸ்வரி தொகுதி அக்கட்சி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடாவின் மகன் ஹரீஷ்கவுடா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா பலமான வேட்பாளரை களமிறக்க பரிசீலனை நடத்தி வருகிறது.

பிரியப்பட்டணா தொகுதி ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மகாதேவா. அவரே மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் அங்கு போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த வெங்கடேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா, வலுவான வேட்பாளரை தேடி வருகிறது.

எச்.டி.கோட்டை-கே.ஆர்.நகர்

எச்.டி.கோட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனில்குமார். இந்த தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் அனில்குமாரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா கட்சி இங்கு மக்கள் செல்வாக்கு உள்ள வேட்பாளரை தேடி வருகிறார்கள்.

கே.ஆர்.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சா.ரா.மகேஷ். ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர், மீண்டும் அந்த தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த ரவிசங்கருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சி அந்த தொகுதியில் வலுவான வேட்பாளரை நிறுத்த முயற்சித்து வருகிறது.

கிருஷ்ணராஜா-சாமராஜா

கிருஷ்ணராஜா தொகுதியில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மந்தரி ராமதாஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த முறை அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த எம்.கே.சோமசேகருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. ஜனதா தளம்(எஸ்) கட்சி இந்த தொகுதியில் மல்லேசை வேட்பாளராக அறிவித்துள்ளது.

சாமராஜா தொகுதி எம்.எல்.ஏ.வாக நாகேந்திரா உள்ளார். பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர், மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் சார்பில் வாசு போட்டியிடுவார் என தெரிகிறது. ஜனதா தளம்(எஸ்) கட்சி இங்கு பலமான வேட்பாளரை தேடி வருகிறது.

நரசிம்மராஜா

நரசிம்மராஜா தொகுதியில் காங்கிரசை சேர்ந்த தன்வீர்சேட் எம்.எல்.ஏ.வாக உள்ளார். தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள தன்வீர் சேட், மீண்டும் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். ஜனதா தளம்(எஸ்), பா.ஜனதா கட்சிகள் இங்கு போட்டியிட மக்கள் செல்வாக்கு உள்ள சிறுபான்மையின வேட்பாளரை தேடி வருகிறது.


Next Story