பொம்மனஹள்ளியில் சதீஷ் ரெட்டி தொடர் வெற்றி பெறுவாரா?
பொம்மனஹள்ளியில் சதீஷ் ரெட்டி தொடர் வெற்றி பெறுவாரா என்பது பற்றி இங்கு காண்போம்.
பெங்களூரு:
கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது பொம்மனஹள்ளி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இங்கு கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 3 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளது. இந்த 3 தேர்தல்களிலும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சதீஷ் ரெட்டி தொடர் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். பா.ஜனதாவின் கோட்டையாக உள்ள இந்த தொகுதியில் மீண்டும் சதீஷ் ரெட்டியே, பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிட 12 பேர் 'டிக்கெட்' கேட்டு வந்தனர். ஆனால் அந்த கட்சி, உமாபதி சீனிவாஸ் கவுடா என்பவரை இங்கு வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் நாராயண் ராஜூ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 42 ஆயிரத்து 719 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 493 ஆண்களும், 2 லட்சத்து 5 ஆயிரத்து 155 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 71 பேரும் அடங்குவர்.
இங்கு வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக ரெட்டி, ஒக்கலிகர் சமுதாய மக்கள் உள்ளனர். இதேபோல் பிராமணர், லிங்காயத், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் வாக்குகளும் குறிப்பிடத்தக்க சதவீதம் உள்ளது. மேலும் தமிழ், இந்தி ஆகிய மொழி பேசும் மக்களும் இங்கு வாக்காளர்களாக உள்ளனர். இந்த தொகுதியில் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பொம்மனஹள்ளி, எச்.எஸ்.ஆர். லே-அவுட், புட்டேஹள்ளி, ஜரகனஹள்ளி, பிலிகஹள்ளி, ஓங்கசந்திரா, அரககெரே மலளி, மங்கன பால்யா ஆகிய 8 வார்டுகள் உள்ளன.
மெஜாரிட்டி வார்டுகளை தனது கையில் வைத்து உள்ள பா.ஜனதா பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது. இதேபோல் 3 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள சதீஷ் ரெட்டியும் இங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு உள்ளார் என கூறப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் சதீஷ் ரெட்டி தொடர் வெற்றிபெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.