தேர்தல் பணியாளர்களுக்கு ஹாசன் கலெக்டர் எச்சரிக்கை
வீட்டில் இருந்து ஓட்டுப்போடுபவர்களிடம் குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப்போட அழுத்தம் கொடுப்பதாக எழுந்த புகாரின்பேரில் தேர்தல் பணியாளர்களுக்கு ஹாசன் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹாசன்:
நாட்டிலேயே முதன் முறையாக கர்நாடக சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வாக்குப்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே பல முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் ஆர்வமுடன் வாக்களித்தனர். ஒரே நாளில் 3,502 பேர் தபால் வாக்கு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் ஹாசனில் வீட்டில் இருந்து ஓட்டுப்போட்ட சிலரிடம் தபால் வாக்குப்பதிவுக்காக சென்ற ஊழியர்கள் குறிப்பிட்ட கட்சியின் பெயரை கூறி அந்த கட்சிக்காக வாக்களிக்கும்படி அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஹாசன் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அர்ச்சனா மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகத்திற்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், வீட்டில் இருந்து ஓட்டுப்போடும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களிடம் ஓட்டுப்பதிவை பெற செல்லும் அரசு ஊழியர்கள், குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடும்படி கூறிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது சட்டவிரோதம். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 1951-ன் படி கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.