அழிந்து வரும் கூட்டுக் குடும்ப முறை.. மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
பெற்றோர் உயிருடன் இருக்கும்வரை அவர்களது சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது என நீதிபதிகள் கூறினர்.
மும்பை:
மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. 2015-ம் ஆண்டு கணவர் உயிரிழந்த பிறகு லட்சுமியின் வீட்டுக்கு அவரது இளைய மகன், மனைவியுடன் வந்து உள்ளார். அவர்கள் லட்சுமியுடன் ஒன்றாக அந்த வீட்டில் இருக்க தொடங்கி உள்ளனர். ஒருகட்டத்தில் இளைய மகன், மனைவியுடன் சேர்ந்து தாயை வீட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் தானேயில் உள்ள மூத்த மகனின் வீட்டுக்கு சென்ற லட்சுமி, இளைய மகன் தினேஷ் தனது வீட்டில் இருந்து காலிசெய்ய உத்தரவிட வேண்டும் என மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.
லட்சுமியின் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தினேசை தாயின் வீட்டை காலி செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தினேஷ் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, பிர்தோஷ் பூனிவாலா அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், "கூட்டுக்குடும்ப முறை குறைந்து வருவதால் பெரும்பாலான முதியவர்கள் தங்கள் குடும்பத்தினரால் கவனிக்கப்படுவதில்லை. இதனால் பல முதியவர்கள் குறிப்பாக விதவை பெண்கள் தங்கள் கடைசி காலத்தை தனிமையில் கழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். உணர்வுப்பூர்வமாக புறக்கணிக்கப்பட்டு அவர்களுக்கு நிதி உள்பட எந்த ரீதியிலும் ஆதரவு கிடைப்பதில்லை. மனிதர்களின் பேராசை அதிகமாக இருப்பதால் உலகம் சிறப்பாக இல்லை என்பதை, எங்களுக்கு வரும் பல வழக்குகள் காட்டுகின்றன. சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண், தனது மகனுக்கு எதிராகவே வழக்கு தொடர்வது ஒரு வயதான தாயின் துரதிர்ஷ்டவசமான கதை ஆகும். பெற்றோர் உயிருடன் இருக்கும்வரை அவர்களது சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது" என கூறினர்.
மேலும் லட்சுமியின் மகன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 15 நாட்களில் தாயின் வீட்டில் இருந்து காலி செய்யவும் தினேசுக்கு உத்தரவிட்டனர்.