உ.பி.யில் மணல் லாரி கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி
மணல் லாரி கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் ஒரு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மணல் லாரி கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கேசவ் சத்ரா கோஸ்வாமி கூறுகையில்,
"இன்று அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திரும்பும்போது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிருடன் மணலில் புதைந்தனர். குடும்பத்தினரை மீட்க அப்பகுதியினர் மணலை அகற்ற முயன்றனர். ஆனால் அகற்ற முடியாத காரணத்தால் புல்டோசர் வரவழைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் அவ்தேஷ் (40), அவரது மனைவி சுதா (35) மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் லல்லா (5), சுனைனா (11) மற்றும் புட்டு (4) மற்றும் அவர்களது உறவினர் கரண் (35), அவரது மனைவி ஹீரோ (30) மற்றும் இவர்களது மகள் கோமல் (5) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 5 வயது சிறுமி காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்றார்.
மணல் லாரி கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.