வாகன நெரிசல் இல்லாத நகரமாக பெங்களூருவை மாற்ற முயற்சி- போலீஸ் மந்திரி பரமேஸ்வர் சூளுரை
வாகன நெரிசல் இல்லாத நகரமாக பெங்களூருவை மாற்ற முயற்சிப்பதாக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு:-
போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பறக்கும் கேமராக்கள்
போக்குவரத்து நெரிசல் விவகாரத்தில் பெங்களூருவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. வாகன நெரிசலை குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளோம். நகரில் காலை மற்றும் மாலை நேரத்தில் அந்தந்த மண்டல துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் களத்தில் நின்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் அதிக வாகன நெரிசல் ஏற்படும் பகுதிகளில் பறக்கும் கேமராக்களை(டிரோன் கேமராக்கள்) பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இது நாங்கள் முதல் முறையாக மேற்கொள்ளும் ஒரு புதிய முயற்சி ஆகும். காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசலை குறைக்கும் பொருட்டு போக்குவரத்து போலீஸ் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு போலீசாரையும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம்.
போக்குவரத்து நெரிசல்
இத்தகைய நடவடிக்கைகளால் அடுத்த 3 மாதங்களில் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறையும். வாகன நெரிசல் இல்லாத நகரமாக பெங்களூருவை மாற்ற நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதற்கு வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்க வேண்டும். பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் வினியோகம் செய்த 106 பேரை கண்டறிந்து அவர்களை கர்நாடக எல்லையை விட்டு விரட்டியடித்துள்ளோம்.
வெளிநாட்டினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த நாட்டின் அரசுக்கு பரிந்துரை செய்வோம். போதைப்பொருள் இல்லாத பெங்களூருவை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். போலீஸ் துறையில் பணி இடமாறுதலில் லஞ்சம் நடமாடுவது முற்றிலுமாக ஒழிக்கப்படும். சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமனம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதனால் அதுபற்றி நான் பேச மாட்டேன்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.