தாய்மொழியில் கல்வி கற்பதால் என்ன பலன்? மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம்


தாய்மொழியில் கல்வி கற்பதால் என்ன பலன்? மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம்
x

தாய்மொழியில் கல்வி கற்பதால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கி உள்ளார்.

தாய்மொழியில் கல்வி கற்றால்....

குஜராத் மாநிலம், விஜப்பூரில் பள்ளி விழா ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தாய்மொழியில் கல்வி கற்பதால் மாணவர்களின் சிந்தனை, பகுத்தறிவு, பகுப்பாய்வு திறன் அதிகரிக்கும். தொழில்நுட்ப கல்வி, மருத்துவ கல்வி, உயர்படிப்புகள் ஆகியவற்றுக்கான பாடத்திட்டங்களை மாநில மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி நடந்து வருகிறது.

புதிய கல்விக்கொள்கை

சுதந்திரத்துக்கு முந்தைய ஆங்கிலேய கல்விக்கொள்கையின்கீழ், முறையான கற்றல் அறிவாற்றலின் அடையாளமாக இருந்தது. மாணவர்களிடம் சிந்தனை, ஆராய்ச்சி, பகுப்பாய்வு, முடிவு எடுக்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் கிடையாது. இது சமூகத்தில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியது.

புதிய கல்விக்கொள்கை, தாய்மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட அடிப்படை மாற்றங்களைக் கொண்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் புதிய தேசியக்கல்வி கொள்கை, இந்தியாவை உலகிலேயே முதல் இடத்துக்கு கொண்டு வரும்.

ஒரு மாணவர் தாய்மொழியில் படிக்கிறபோது, பேசுகிறபோது, சிந்திக்கிறபோது, அவரது சிந்திக்கும் திறனும், பகுத்தறியும் திறனும், பகுப்பாய்வு செய்யும் திறனும், ஆராய்ச்சித் திறனும் இயல்பாக வெளிப்படும்.

புதிய தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படை மாற்றம், மாணவர்களை அவர்களது தாய்மொழியில் கல்வியை கற்கச்செய்வதாகும். அடுத்த 7 ஆண்டுகளில் எல்லா மாணவர்களும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்கிற நிலை வரும் என்று நம்புகிறேன். அவர்களது தாய்மார்களே அவர்களுக்கு தங்கள் மொழியில் கல்வியை போதிக்க முடியும்.

வணிக கல்வி, திறன் கல்வி

குஜராத்தி, தெலுங்கு, ஒடியா, பஞ்சாபி, வங்காளம் ஆகிய மொழிகளில் உயர்கல்வி, மருத்துவக்கல்வி தொடங்கி விடும். அதில் இருந்து, இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பைச் செய்யும்.

புதிய தேசிய கல்விக்கொள்கை, வணிக கல்வியிலும், திறன் கல்வியிலும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 10-ம் வகுப்புக்குள் வணிகக்கல்வியுடன் இணைக்கப்பட்டு விடுவார்கள். இது அவர்களை சுய வேலை வாய்ப்பு, குறு மற்றும் குடிசைத் தொழில்கள் செய்வதற்கு உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story