3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிரதமராக மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க இருக்கிறார். ஜனாதிபதியை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க மோடி உரிமை கோரினார்.
புதுடெல்லி,
இந்திய ஜனநாயகத்தின் ஆட்சிப்பீடமாக விளங்குவது நாடாளுமன்றம். இந்த நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா 240 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றிருந்தது.
ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் என்ற இலக்கை இந்த கூட்டணி கடந்திருந்ததால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவானது.இதை உறுதிசெய்யும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆட்சிஅமைக்க பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தன.முக்கியமாக தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா (ஷிண்டே), லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்கள் இருப்பை உறுதி செய்தன.உடனடியாக மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜனதா தொடங்கியது. இன்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஜனாதிபதியை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை மறுநாள் பிரதமராக மோடி பதவியேற்க இருக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அதிமுக சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.