மத அமைப்பின் 23 வங்கி கணக்குகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 23 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்லது.
புதுடெல்லி,
புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இஸ்லாமிய மத அமைப்பு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா. இந்த அமைப்பின் கிளையாக ரிஹப் இந்தியா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு மீது பல்வேறு மாநிலங்களில் போலீசாரும், தேசிய புலனாய்வு அமைப்பும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில் பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் குற்றங்கள் செய்ய நிதியை பயன்படுத்துவதாக அமலாக்கத்துறை 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 23 வங்கிக்கணக்குகளை அமலாக்கத்துறை நேற்று அதிரடியாக முடக்கியுள்ளது. இந்த வங்கி கணக்குகளில் இருந்த 59 லட்ச ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் கிளை அமைப்பான ரிஹப் இந்தியா பவுண்டேஷனின் 10 வங்கி கணக்குகளையும், அந்த வங்கி கணக்கில் இருந்த சுமார் 10 லட்ச ரூபாயையும் அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.