அரவிந்த் கெஜ்ரிவாலை தேடப்படும் பயங்கரவாதிபோல் அமலாக்கத்துறை நடத்துகிறது - சுனிதா கெஜ்ரிவால்


அரவிந்த் கெஜ்ரிவாலை தேடப்படும் பயங்கரவாதிபோல் அமலாக்கத்துறை நடத்துகிறது - சுனிதா கெஜ்ரிவால்
x

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் அமலாக்கத்துறை மனுவை விசாரித்து முடிக்கும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு மே 11ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதன்பின்னர், ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார். இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி நியாய் பிந்து, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினார். இந்த ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்தது.

இதுதொடர்பாக சுனிதா கெஜ்ரிவால் பேசியதாவது,

"அரியானாவிலிருந்து கூடுதல் தண்ணீரை பெறுவதற்காக தனது கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். நாட்டில் சர்வாதிகாரம் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டது.

நேற்று தான் உங்கள் முதல்-மந்திரிக்கு ஜாமீன் கிடைத்தது. இன்று காலையில் உத்தரவு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் அவரின் ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதி போல் அமலாக்கத்துறை நடந்து கொள்கிறது. அமலாக்கத்துறை யாருக்கும் சுதந்திரம் கொடுக்க விரும்பவில்லை. முதல்-மந்திரிக்கு எதிராக தடைகோரி ஐகோர்ட்டிற்கு சென்றுள்ளது. தீர்ப்பு இன்னும் வரவில்லை. நாங்கள் ஐகோர்ட்டு நீதி வழங்கும் என்று நம்புகிறோம்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story