உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி: வெளிநாட்டு பயணிகளுக்கு இன்றுமுதல் கொரோனா பரிசோதனை


உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி: வெளிநாட்டு பயணிகளுக்கு இன்றுமுதல் கொரோனா பரிசோதனை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 24 Dec 2022 5:49 AM IST (Updated: 24 Dec 2022 7:40 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இன்றுமுதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் புதிய வகை உருமாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாகப் பரவி வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நுழைந்துவிட்டது. இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய வகை கொரோனா இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். பிரதமர் மோடியும் கொரோனா நிலைமை பற்றி டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்தது. இதில் முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சனிக்கிழமை முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறைக்கு, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: வெளிநாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும்.

மரபணு பரிசோதனை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகளை அவர்களின் நாடுகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களே தேர்வு செய்யலாம். அந்த பயணிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும்.

பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story