பெண் டாக்டர் கொலை எதிரொலி; மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அரசு அறிவிக்க ஐ.எம்.ஏ. கோரிக்கை
கேரளாவில் சிகிச்சையின்போது பெண் டாக்டரை, நோயாளி கொலை செய்த நிலையில், மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அரசு அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கொட்டரக்காரா பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இதில் டாக்டராக வந்தனா தாஸ் (வயது 22) என்பவர் பணியாற்றி வந்து உள்ளார்.
இந்நிலையில், சிகிச்சைக்காக வந்த நபர் ஒருவருக்கு பெண் டாக்டர் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது, அந்த நபர் திடீரென டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளார்.
இந்த சம்பவத்தில், போலீசார் உள்பட பலர் மீதும் அந்த நோயாளி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாக்டர்களை பாதுகாக்க முடியாவிட்டால், மருத்துவமனைகளை மூடுங்கள் என்று இந்த சம்பவத்திற்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த சம்பவத்தில் போராட்டம் நடத்த வரும்படி, டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன் கண்டனமும் வெளியிட்டு உள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளதுடன், சட்டத்தின்படி முழு அளவில் குற்றவாளி தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, பணியிடங்களில் சுகாதார நலம் சார்ந்த பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கவும் கோரியுள்ளது.