கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த ரூ.24 ஆயிரம் கோடியில் திட்டம் - மத்திய அரசு தகவல்
மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த ரூ.24 ஆயிரத்து 435 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. உறுப்பினர் எம்.சண்முகம் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க திட்டம் பற்றி கேள்வி கேட்டு இருந்தனர். அதாவது கிழக்கு கடற்கரை சாலையை கல்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உரிய அமைப்புகளுடன் நான்குவழி சாலையாக அமைக்க திட்டம் உள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள், மாமல்லபுரம் முதல் கடலூர் வரையிலான நான்குவழி சாலை திட்டத்தின் முன்னேற்றங்கள், கிழக்கு கடற்கரை சாலைக்கான மொத்த திட்டச்செலவுகள் பற்றி கேட்கப்பட்டு இருந்தது.
இதற்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின் கட்காரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பாலங்கள், சுரங்கங்களுடன் பிரிக்கப்பட்ட நான்கு வழியாக அமைக்கப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து கடலூர் வரையிலான கிழக்கு கடற்கரை சாலையும் விரிவுபடுத்தும் நிலையில் உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான இந்த கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்துவதற்கான மொத்த திட்ட மதிப்பீட்டு செலவு ரூ.24 ஆயிரத்து 435 கோடி ஆகும்.
திட்டப்பணி மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கி.மீ. தூர நான்கு வழி, முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கி.மீ. நான்கு வழி, மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 46 கி.மீ. வழி, புதுச்சேரி முதல் பூண்டியன்குப்பம் வரை 38 கி.மீ. நான்கு வழி, பூண்டியன்குப்பம் முதல் சட்டநாதபுரம் வரை 56 கி.மீ. நான்குவழி, சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை 55 கி.மீ. நான்கு வழி, நாகப்பட்டினம் முதல் ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை 313 கி.மீ. வழி, தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை 125 கி.மீ. வழி என 8 பிரிவாக நடத்தப்பட உள்ளது.
பணியில் முன்னேற்றம்
இதில் மாமல்லபுரம் முதல் முகையூர் வரையிலான 31 கி.மீ. நான்கு வழியை 11-5-2024 அன்று முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 28-2-2023 வரை 2.47 சதவீத அளவே பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. முகையூர் முதல் மரக்காணம் வரையிலான 31 கி.மீ. நான்கு வழி பணிகளுக்கு 11-5-2022 அன்று பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. மரக்காணம் முதல் புதுச்சேரி வரையிலான 46 கி.மீ. பணிகளுக்கு ஏலம் கோரப்பட்டு உள்ளது. புதுச்சேரி முதல் பூண்டியன்குப்பம் வரை 38 கி.மீ. பணிகளை 14-11-2023 அன்று முடிக்க திட்டமிடப்பட்டதில் 41.60 சதவீத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.