மைசூரு அரண்மனை வளாகத்தில் தசரா யானைகளுக்கு வழியனுப்பு விழா; பிரியா விடைபெற்று சென்றன
தசரா விழா முடிவடைந்த நிலையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று தசரா யானைகளுக்கு வழியனுப்பு விழா நடந்தது. அந்த யானைகள் பிரியா விடைபெற்று சென்றன.
மைசூரு:
மைசூரு தசரா விழா
கர்நாடகத்தில் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா உலக புகழ்பெற்றதாகும். கர்நாடக மக்களால் 'நாடஹப்பா' என்ற பெயரில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தசரா விழா கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி தொடங்கி கடந்த 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் கடந்த 5-ந்தேதி நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் வந்து ஜம்புசவாரி ஊர்வலத்தையும், அலங்கார வண்டிகளின் அணிவகுப்பை கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் ஜம்பு சவாரி ஊர்வலம் முடிந்ததும் நேற்று முன்தினம் யானைகள் அரண்மனை வளாகத்தில் ஓய்ெவடுத்தன. மேலும் ஜாலியாக குளித்து மகிழ்ந்தன.
வழியனுப்பு விழா
இந்த நிலையில் தசரா ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகளுக்கு நேற்று காலை வழியனுப்பு விழா நடந்தது. தசரா விழா தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே நாகரஒலே, பந்திப்பூர், டி.பி.குப்பே, கே.குடி உள்ளிட்ட பல்வேறு யானைகள் முகாம்களில் இருந்து 14 யானைகள் மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன. அதாவது முதல் கட்டமாக 9 யானைகள் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வந்தன. அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த யானைகளுக்கு தினமும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. சத்தான உணவு வகைகளும் வழங்கப்பட்டு வந்தது.
யானை பாகன்களும், அவர்களின் குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். பாகன்களின் குழந்தைகளுக்காக தற்காலிக மருத்துவமனை, பள்ளிக்கூடம் அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று அந்த யானைகளுக்கு வழியனுப்பு விழா நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு மைசூரு அரண்மனை வளாகத்தில் யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அரண்மனை அர்ச்சகர் சந்திரசேகர தீட்சித் யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்தார். இதில் கலெக்டர் பகாதி கவுதம், வனத்துறை அதிகாரி கரிகாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். யானைகளை வரிசையாக நிற்க வைத்து மாலை போட்டு, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்பட்டது.
லாரிகளில் சென்றன
இதையடுத்து தங்க அம்பாரியை சுமந்த அபிமன்யு யானை உள்பட 14 யானைகளும் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. லாரிகளில் ஏறும் முன்பு சில யானைகள் தும்பிக்கைகளை பின்னிக்கொண்டு ஆரத்தழுவிக் கொண்டன. மேலும் அந்த யானைகள் பிரியா விடைபெற்று மைசூருவில் இருந்து புறப்பட்டு சென்றன.
முன்னதாக வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த யானைகள், அங்கு திரண்டிருந்தவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி வணக்கம் செலுத்தியது. அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் ெசய்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். யானைகளின் பாகன்களும், அவர்களது குடும்பத்தினரும் தனி வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம்
தசரா விழா முடிவடைந்த பிறகும் மைசூருவுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பொருட்காட்சி மற்றும் மின்விளக்கு அலங்காரம் ஆகியவற்றை மக்கள் பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
லாரியில் ஏறாமல் அடம்பிடித்த யானை
மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகளுக்கு வழியனுப்பு விழா நடந்தது. அரண்மனை வளாகத்தில் யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அவை, லாரிகளில் ஏற்றி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக, அரண்மனை வளாகத்தில் இருந்து ஸ்ரீராமா என்ற யானை, சுமார் 2 மணி நேரம் லாரியில் ஏறாமல் அடம்பிடித்தது. இதையடுத்து அபிமன்யு யானை உதவியுடன் ஸ்ரீராமா யானையை பாகன்கள் லாரியில் ஏற்றி அங்கிருந்து முகாமுக்கு அழைத்து சென்றனர். யானைகள் லாரியில் ஏற அடம் பிடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வந்தது 14...!!! ெசன்றது 15...!!!
மைசூரு தசரா விழாவில் பங்கேற்க இந்த ஆண்டு 14 யானைகள் வரவழைக்கப்பட்டன. முதல்கட்டமாக அபிமன்யு உள்பட 9 யானைகள் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதியும், 2-வது கட்டமாக 5 யானைகள் செப்டம்பர் மாத தொடக்கத்திலும் வந்தன. மைசூருவில் யானைகளுக்கு தினமும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தசரா விழாவில் பங்கேற்க வந்த லட்சுமி என்ற யானை கர்ப்பமாக இருந்தது. இதனால் அந்த யானை தசரா ஊர்வலத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) லட்சுமி யானை குட்டி ஈன்றது. அந்த யானைக்கு தத்தாத்ரேயா என பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் லட்சுமியும், அதன் குட்டியும் பந்திப்பூரில் உள்ள ராம்புரா பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் தசர விழாவில் பங்கேற்க 14 யானைகள் வந்த நிலையில் தற்போது 15 யானைகள் திரும்பி செல்கின்றன.
'அபிமன்யு தான் என் கடவுள்' - பாகன் உருக்கம்
அபிமன்யு யானையின் பாகன் வசந்த் என்பவர் கூறுகையில், 'தசரா ஊர்வலத்தில் அம்பாரியை சுமந்த அபிமன்யுவுக்கு நான் 3 ஆண்டுகளாக பாகனாக உள்ளேன். நான் 23 ஆண்டுகள் தசரா விழாவில் பங்கேற்றுள்ளேன். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்களின் கரகோஷமும் விண்ணை பிளக்கும் அளவுக்கு இருந்தது. அவ்வளவு சத்தத்துக்கு மத்தியிலும் எந்த சலனமும் இல்லாமல் அபிமன்யு யானை, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த தங்க அம்பாரியை சுமந்து சென்றது. அது தான் எனது கடவுள். சாமுண்டீஸ்வரி அம்மன் அருளால் 3 ஆண்டுகள் அபிமன்யுவின் பாகனாக இருந்துள்ளேன். அதற்கு பாகனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். இன்னும் 3 ஆண்டுகளுக்கு தங்க அம்பாரியை சுமக்கும் உடற்தகுதி அபிமன்யுவுக்கு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியத்தில் அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க அபிமன்யு யானை பெரிதும் உதவியாக இருந்தது. இதனால் கால்நடை டாக்டர் சித்தப்பா என்பவர் அபிமன்யு யானையை 'ஏ.கே.-47' என அழைத்தார். அது ஏராளமான மக்களின் உயிரை காப்பாற்றி உள்ளது' என்று உருக்கமாக கூறிய வசந்த், 'அது தான் என் கடவுள்' என்று மீண்டும் ஒருமுறை கூறினார்.
900 கிலோ எடையை 2¼ மணி நேரம் சுமந்து சாந்தமாக இருந்த அபிமன்யு யானை
வனத்துறை அதிகாரி கரிகாலன் கூறுகையில், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி தசரா ஊர்வலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அபிமன்யு யானை, தங்க அம்பாரி உள்பட கிட்டத்தட்ட 900 கிலோவை சுமந்து கொண்டு எந்த சலனமும் இல்லாமல், மக்கள் சத்தம், பீரங்கி சத்தம், மேள சத்தம், வாணவேடிக்கையை கண்டு மிரளாமல் சாந்தமாக சென்றது. அந்த 900 கிலோ எடையையும் அபிமன்யு யானை கிட்டத்தட்ட 2 மணி நேரம் 15 நிமிடம் சுமந்து கொண்டு சென்றது. தசரா விழாவையொட்டி அபிமன்யு உள்பட அனைத்து யானைகளுக்கும் 59 நாட்கள் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அபிமன்யு யானைக்கு அம்பாரியை சுமக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் விளைவாக 900 கிலோ எடையையும் அது சர்வசாதாரணமாக சுமந்து கொண்டு சென்றது. இவ்வளவு எடையையும் சுமந்து கொண்டு 2 மணி நேரத்துக்கும் மேலாக நின்றது வியப்பை ஏற்படுத்துகிறது என்றார்.