வடமாநிலங்களில் தசரா கொண்டாட்டம்: களை கட்டிய ராவணன் தகன நிகழ்ச்சி


வடமாநிலங்களில் தசரா கொண்டாட்டம்:  களை கட்டிய ராவணன் தகன நிகழ்ச்சி
x

பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ராவணன் தகன நிகழ்ச்சி நடந்தது.



புதுடெல்லி,


நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்களில் மக்கள் இன்று ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கால், 2 ஆண்டுகளாக அமலில் இருந்த தடைகள் விலக்கி கொள்ளப்பட்ட சூழலில், இந்த தசரா கொண்டாட்டம் களை கட்டி உள்ளது.

இதன்படி வடமாநிலங்களில் தசரா கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக ராவணன் தகன நிகழ்ச்சியும் நடந்தது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்து விடுவது வழக்கம்.

பீகாரில், பாட்னா நகரில் உள்ள காந்தி மைதானத்தில் ராவணன் தகன நிகழ்ச்சி நடந்தது. உத்தரகாண்டின் டேராடூன் நகரில் உள்ள பரேட் மைதானத்தில் ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைத்து, தகனம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பஞ்சாப்பில் லூதியானா நகரில் தரேசி மைதானத்தில் பெரிய உருவம் கொண்ட ராவணன் உருவ பொம்மை தகனம் செய்யப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கானோர் சுற்றி நின்று கண்டு களித்தனர். அமிர்தசரஸ் நகரில் துர்கியானா கோவிலுக்கு வெளியேயும் தகன நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

லடாக்கில், லே நகரில் போலோ மைதானத்தில் ராவணன் உருவ பொம்மை தகனம் செய்யப்பட்டது. உத்தர பிரதேசத்தில் 600 ஆண்டுகளாக ராவணன் தகனம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த முறை மழையால் நிகழ்ச்சி பாதிக்கப்பட கூடிய சூழல் ஏற்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெறும் என ராம்லீலா மைதானத்தின் செயலாளர் ஆதித்ய திவிவேதி கூறியுள்ளார்.

டெல்லி செங்கோட்டை மைதானத்தில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத்தின் உருவ பொம்மைகள் பல அடி உயரத்திற்கு நிறுவப்பட்டு உள்ளன. இந்த தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்த தசரா கொண்டாட்டத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். பாகுபலி நடிகர் பிரபாஸ் மற்றும் கெஜ்ரிவால் இணைந்து, ராவணன் உருவ பொம்மையின் மீது அம்பு எய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில், லால் கீலா பகுதியிலும், பீத்தாம்புரா நகரில் உள்ள நேதாஜி சுபாஷ் பூங்கா பகுதியிலும், அஜ்மீரி கேட் பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்திலும், ஜனக்புரி ராம்லீலா மைதானத்திலும், ஜவகர்லால் நேரு மைதானத்திலும் என 5 இடங்களில் ராவணன் தகன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


Next Story