ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் துரை வைகோ பங்கேற்பு - ஐதராபாத்தில் 5 மணி நேரம் நடைபயணம்
ராகுல் காந்தியுடன் இணைந்து ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ சுமார் 5 மணி நேரம் நடைபயணம் மேற்கொண்டார்.
ஐதராபாத்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ராகுல்காந்தி நடைபயணத்தைத் தொடர்ந்தார்.
இதையடுத்து தெலங்கானா மாநிலத்தில் கடந்த 23-ந்தேதி ராகுல் காந்தியின் நடைபயணம் தொடங்கியது. தீபாவளியின் காரணமாக யாத்திரைக்கு மூன்று தினங்கள் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் தனது நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் ராகுல் காந்தி தனது 56-வது நாள் நடைபயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார். அவருடன் இணைந்து ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ சுமார் 5 மணி நேரம் நடைபயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து ராகுல் காந்தியுடன் காலை உணவு உட்கொண்ட துரை வைகோ, தமிழகம் மற்றும் இந்தியாவில் பா.ஜ.க.வின் அரசியல் நிலைப்பாடு, வலது சாரி கொள்கைகள் உலகில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறித்து விவாதித்தார்.