தொடர் கனமழையால் மும்பை, புனே நகரங்களை சூழ்ந்த வெள்ளம் - 6 பேர் பலி


தொடர் கனமழையால் மும்பை, புனே நகரங்களை சூழ்ந்த வெள்ளம் - 6 பேர் பலி
x

மராட்டியத்தில் பல இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் மும்பை மற்றும் புனே நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மும்பை,

மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. நேற்று மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் அதிகாலை முதல் பிற்பகல் 1 மணி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாமல் பெய்தது.

தொடர் மழையின் காரணமாக மும்பை நகரின் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை காரணமாக நேற்று மத்திய ரெயில்வே வழித்தடத்தில் 28 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் மின்சார ரெயில்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மழை காரணமாக ஓடுபாதை சரியாக தெரியாததால் மும்பை விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்களின் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மும்பையை அடுத்த தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.

இதேபோல புனேயிலும் பலத்த மழை பெய்தது. மேலும் கடக்வாசலா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், முதா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்தது. குறிப்பாக புனே சிங்காட் ரோடு குடியிருப்பு கட்டிடங்களுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்தது. பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன.

இதற்கிடையே புனே டெக்கான் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய சிற்றுண்டி வியாபார தள்ளுவண்டியை மீட்க முயன்ற 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். புனே அருகே உள்ள லாவசா நகரில் நேற்று காலை 7 30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 40 சென்டி மீட்டர் மழை அளவு பதிவானது.

இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3பேர் உயிரோடு மன்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story