ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் 'துவாரே ரேஷன்' திட்டம் சட்டவிரோதமானது - கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு


ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும்  துவாரே ரேஷன் திட்டம் சட்டவிரோதமானது - கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Sept 2022 6:05 PM IST (Updated: 29 Sept 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் 'துவாரே ரேஷன்' திட்டம் சட்ட விரோதமானது என கொல்கத்தா ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபின் 'துவாரே ரேஷன்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 'துவாரே ரேஷன்' திட்டத்தை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த ஒருநபர் பெஞ்ச் இந்தத் திட்டத்தில் சட்டவிரோதமானது எதுவும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ஒருநபர் பெஞ்ச் வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய பரிசீலனை செய்து வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுசெயலாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், மக்களுக்கும் மாநில அரசுக்கும் ஆதரவான 'துவாரே ரேஷன்' திட்டம் சட்டவிரோதமானது என கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த திட்டம் மக்கள் நலனுக்கானது. ஆனால் பாஜகவுக்கு இந்த திட்டத்தில் சிக்கல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story