ரெயில் புறப்படுவதை தாமதப்படுத்த வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்த விமானப்படை வீரர் கைது


ரெயில் புறப்படுவதை தாமதப்படுத்த வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்த விமானப்படை வீரர் கைது
x

கோப்புப்படம்

ரெயில் புறப்படுவதை தாமதப்படுத்த வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்த விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

புதுடெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை தாமதப்படுத்துவதற்காக வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்த விமானப்படை சார்ஜென்ட் கைது செய்யப்பட்டார்.

கட்டளை அறைக்கு நேற்று மாலை 4.48 மணியளவில் மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு வந்தது. இதையடுத்து மாலை 4.55 மணிக்கு புறப்படவிருந்த ரெயிலில் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து மொபைல் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இந்திய விமானப்படை சார்ஜென்ட் சுனில் சங்வான் (வயது 35) அந்த அழைப்பை விடுத்தது தெரிய வந்தது. மும்பையின் சான்டாக்ரூஸில் உள்ள விமானப்படை நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட இடத்திற்குச் செல்வதற்காக சுனில் அந்த ரெயிலில் பயணிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர், தாமதமாக வந்ததால் டெல்லியில் இருந்து ரெயில் புறப்படுவதை தாமதப்படுத்துவதற்காக வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்துள்ளார்.

பி-9 பெட்டியில் அவர் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், அவர் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றினர். அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. சுனில் மீது தொடர்புடைய ஐபிசி பிரிவுகள் மற்றும் இந்திய ரெயில்வே சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.


Next Story