சோப்பு டப்பாக்குள் மறைத்து ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்...3 பேர் கைது
அசாமில் சோப்பு டப்பாக்குள் மறைத்து ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பார்த்த சாரதி மஹந்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் கூடுதல் எஸ்.பி. கல்யாண் பதக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கவுகாத்தியில் இருந்து துப்ரி நோக்கி ஒரு எஸ்யுவி ரக கார் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதித்தனர். அதனுள் ஏராளமான சோப்பு டப்பாக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் கடந்த 25-ம் தேதிதான் இதுபோன்ற 100 சோப்பு டப்பாக்களில் 1.3 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டிருந்தது. அதுவும் இதே எஸ்யுவி ரக கார் தான்.
சந்தேகமடைந்த போலீசார் அதிலிருந்த 50 சோப்பு டப்பாக்களையும் திறந்து பார்த்தனர். நினைத்ததுபோல் அதனுள் பாக்கெட் பாக்கெட்களாக ஹெராயின் இருந்தது. அதன் எடை 700 கிராம் ஆகும். அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், கடத்திவந்த 3 பேரையும் கைது செய்தனர்.
இரு சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட ஹெராயின் மதிப்பு ஏறக்குறைய ரூ.12 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அசாம் முழுவதும் இந்த கும்பல் தான் ஹெராயின் வினியோகம் செய்து வந்துள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது போலீசார் கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.