பாகிஸ்தானிய அழகிக்கு உளவு பார்த்த வழக்கில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு காவல் நீட்டிப்பு


பாகிஸ்தானிய அழகிக்கு உளவு பார்த்த வழக்கில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு காவல் நீட்டிப்பு
x

பாகிஸ்தானிய அழகியின் நிர்வாண புகைப்படத்திற்காக ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த வழக்கில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு நாளை வரை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் (பொறியியலாளர்கள்) தலைவராக பதவி வகித்தவர் பிரதீப் குருல்கர் (வயது 59).

பாகிஸ்தான் நாட்டு அமைப்புகளுக்கு தகவலை பகிர்ந்து உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மராட்டிய பயங்கரவாத ஒழிப்பு படை அவரை சமீபத்தில் கைது செய்தது.

இதற்காக அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டு உள்ளார் என கூறப்படுகிறது. அதுபற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு படைக்கான (ஏ.டி.எஸ்.) கோர்ட்டில் அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பித்து உள்ளனர்.

அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் பெற்ற அக்னி ஏவுகணை திட்டம் உள்பட பல்வேறு ஏவுகணை திட்டங்களில் அவர் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வந்து உள்ளார்.

வருகிற நவம்பரில் அவர் ஓய்வு பெற உள்ள நிலையில், இயக்குநர் அந்தஸ்திலான பதவியில் இருந்து சில நாட்களுக்கு முன் புனே நகரிலுள்ள மற்றொரு டி.ஆர்.டி.ஓ. பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார் என அதிகாரி ஒருவர் கூறினார்.

அவரிடம் இருந்து லேப்டாப், ஹார்டு டிஸ்குகள் மொபைல் போன்கள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவை தடய அறிவியல் சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

அவர், பாகிஸ்தானிய உளவு அமைப்பை சேர்ந்த பெண்ணுடன் தொடர்ந்து, தொடர்பில் இருந்து வந்ததுடன், வாட்ஸ்அப் செய்திகள், குரல் மற்றும் வீடியோ கால்கள் வழியேயும் ரகசிய செய்திகளை பகிர்ந்து வந்து உள்ளார் என தெரிய வந்து உள்ளது.

இந்த விவகாரத்தில், முன்பே அவருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தும் அதனை அவர் கவனத்தில் கொள்ளாமல் இருந்து விட்டார். புனேவில் உள்ள டி.ஆர்.டி.ஓ. வளாகத்தில் கடந்த ஆண்டு, ஹனி டிராப் பற்றிய நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

அதில், ஹனி டிராப்பில் சிக்காமல் தவிர்ப்பது எப்படி என்பது பற்றி வகுப்பு எடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் குருல்கரும் ஒருவர்.

இந்தியாவில் உள்ள முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல்களை, அவர்களது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடக வலைதளங்கள் வழியே எடுத்து கொள்கின்றனர். இவற்றை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புகளால் பணம் கொடுத்து ஊக்குவிக்கப்படும் பெண்கள் உள்ளிட்ட நபர்கள் இந்த ஹனி டிராப் முறையை பயன்படுத்தி தங்களது வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக நூற்றுக்கணக்கில் போலியான சமூக ஊடக கணக்குகள் தொடங்கப்படுகின்றன. இதன்பின், இந்திய பெண்களின் பெயர்களான நேஹா ராஜ்புத், நேஹா குப்தா, ஜாரா தாஸ் குப்தா போன்ற பெயர்களை வசீகரிப்பதற்காக பயன்படுத்தி, முக்கிய உளவு அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் தூதர்கள் போன்றோரை தங்கள் பிடியில் சிக்க வைக்கின்றனர்.

குருல்கரை, ஜரா தாஸ் குப்தா என்ற பெயரில் அணுகிய பெண் ஒருவர், தேசப்பற்று செய்திகளை முதலில் அனுப்பி உள்ளார். அதன்பின் நிர்வாண படங்களையும் அனுப்பி விஞ்ஞானியின் நம்பிக்கையை பெற்று உள்ளார்.

இவருடைய விவகாரத்தில் எடுத்து கொண்டால், டி.ஆர்.டி.ஓ. வலைதளத்தில் அவரது முழு விவரமும் கிடைக்க பெறுவதுடன், முக்கியம் வாய்ந்த திட்ட பணிகளில் அவர் ஈடுபடும் விவரங்களும் கூட விரிவாக காண கிடைக்கின்றன. இதனால், அவரை ஹனி டிராப் முறையில் வீழ்த்துவதற்கு முடிவு செய்து உள்ளனர். அதில் அவர் சிக்கி விட்டார் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனால், முக்கிய உயரதிகாரிகளின் எந்தெந்த விவரங்கள் வலைதளங்களில் பகிரப்பட வேண்டும் என்பது பற்றிய பரிந்துரைகளை வழங்குவது என பயங்கரவாத ஒழிப்பு படை திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில், புனே நகர சிறப்பு பயங்கரவாத ஒழிப்பு படை (ஏ.டி.எஸ்.) கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவரை பயங்கரவாத ஒழிப்பு படையின் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஹனி டிராப்பில் சிக்கி உளவு தகவல்களை பகிர்ந்த அவருக்கு மே 15-ந்தேதி (இன்று) வரை ஏ.டி.எஸ். காவல் விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த காவல் முடிவடைய உள்ள நிலையில், அவர் மீண்டும் புனே நகர சிறப்பு பயங்கரவாத ஒழிப்பு படைக்கான கோர்ட்டில் இன்று ஆஜர் செய்யப்பட்டார். அவரை நாளை வரை பயங்கரவாத ஒழிப்பு படையின் காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் மீண்டும் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.


Next Story