திராவிடனா?, ஆரியனா? சித்தராமையாவுக்கு கர்நாடக முதல்-மந்திரி கேள்வி


திராவிடனா?, ஆரியனா? சித்தராமையாவுக்கு கர்நாடக முதல்-மந்திரி கேள்வி
x

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா திராவிடனா? அல்லது ஆரியனா? என தெளிவுப்படுத்த வேண்டும் என கர்நாடக முதல்-மந்திரி கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரான சித்தராமையா கடந்த வெள்ளி கிழமை பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். பூர்வீக இந்தியர்களின் அமைப்பு அல்ல. இந்த நாட்டின் உண்மையான பூர்வ குடிமக்கள் திராவிடர்கள்.

நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஏனெனில் சில விசயங்களை நினைவுப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆரியர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்களா? அல்லது திராவிடர்களா? இதுபற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என கூறினார்.

அவரது இந்த பேச்சு அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறும்போது, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அவர் திராவிடனா அல்லது ஆரியனா? என முதலில் அறிவிக்கட்டும் என கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் நேருவுடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது என சித்தராமையா கூறியது பற்றி பதிலளித்த பசவராஜ், அது உண்மைதான். மோடியை, நேருவுடன் ஒப்பிட முடியாது.

ஏனெனில் சீனா தாக்கியபோது கடும் நடவடிக்கைகளை எடுக்க நேரு தவறி விட்டார். அதனால், பல பகுதிகளை சீனாவிடம் நாடு இழந்து விட்டது. ஆனால், இந்திய எல்லை பகுதிகளில் சீனா அத்துமீறியபோது, மோடி வலிமையாக எதிர்த்து நின்று கடுமையாக செயல்பட்டார்.

பாகிஸ்தானுடன் மோடி சமரசம் செய்து கொள்ளவில்லை. இந்திய ஒற்றுமையையும், இறையாண்மையையும் மோடி பாதுகாத்து உள்ளார். இந்தியாவை வலிமையுள்ள நாடாக உருவாக்கியுள்ளார். நிச்சயம் நேருவுடன் அவரை ஒப்பிட முடியாது என கூறியுள்ளார்.


Next Story