டாக்டரின் எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம்
பிரபல நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்ட டாக்டரின் எக்ஸ் வலைதள பக்கத்தை முடக்க பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு
பெங்களூருவை சேர்ந்தவர் டாக்டர் சைரியாக் அபி பிலிப்ஸ். இவர் கல்லீரல் சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் பிரபல நிறுவனத்தின் மருந்து பொருட்கள் குறித்து அவதூறு பரப்பும் விதத்தில் கூறி இருந்தார்.
இதுகுறித்து அறிந்த அந்த மருந்து நிறுவனம் உடனடியாக பெங்களூரு கூடுதல் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், டாக்டர் பிலிப்ஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தொடர்ந்து அந்த நிறுவனம் குறித்து அவதூறு பரப்பி வந்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். அந்த சமயத்தில் மருந்து நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், டாக்டர் பிலிப்ஸ், பிற நிறுவனங்களின் மருந்து பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக, மனுதாரரின் தயாரிப்புகள் குறித்து போலியாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, டாக்டரின் எக்ஸ் வலைதள பக்கத்தை முடக்க எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும் மறு உத்தரவு வரும்வரை வலைதள கணக்கு முடக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றார்.