தேசிய மருந்துவிலை நிர்ணய ஆணைய வெள்ளிவிழா - வணிக நோக்கத்துடன் மருந்துகளை தயாரிக்க கூடாது: மந்திரி மன்சுக் மாண்டவியா


தேசிய மருந்துவிலை நிர்ணய ஆணைய வெள்ளிவிழா - வணிக நோக்கத்துடன் மருந்துகளை தயாரிக்க கூடாது: மந்திரி மன்சுக் மாண்டவியா
x

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்.

புதுடெல்லி,

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மந்திரி டாக்டர்.மன்சுக் மாண்டவியா இன்று உரையாற்றினார்.

மத்திய ரசாயனம், உரங்கள் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் பகவந்த் கூபா அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதன் தொடக்க அமர்வில், மருந்து தரவு நிர்வாக நடைமுறை 2.0 (ஐடிபிஎம்எஸ் 2.0) இணையதளம் மற்றும் நவீனப்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய பார்மா சாஹி தாம் 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விழாவில் உரையாற்றிய டாக்டர்.மன்சுக் மாண்டவியா பேசுகையில், "தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், ஒரு மருந்து கட்டுப்பாட்டாளராக மட்டுமின்றி, மருந்துகள் எளிதில் கிடைக்கும் வகையில் பணியாற்றுகிறது.

கடந்த 25 ஆண்டுகாள மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் குறிப்பிட்ட பங்களிப்பை அளித்து வருகிறது.

தொடர்ந்து தரமான மருந்துப் பொருட்களை தயாரித்து வரும் இந்திய தொழில்துறையினருக்கு பாராட்டுக்கள். அவர்கள் வணிக நோக்கத்துக்காக மட்டுமின்றி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், மருந்துகளை தயாரிக்க வேண்டும், புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும். மருந்துகளுக்குத் தேவையான முக்கியமான பல மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் உதவி செய்கிறது.

கொரோனா பெருந்தொற்று நேரத்தில், இந்திய மருந்து நிறுவனங்களின் பங்களிப்பை மறக்கமுடியாது, என்றும் நினைவுகூரத்தக்கது. மேலும், மக்களுக்கு தரமான சுகாதார சேவையை அளிப்பதில், தொழில்துறைக்கும், அரசாங்கத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்."

இவ்வாறு அவர் பேசினார்.

பார்மா சாஹி தாம் 2.0 செயலியானது, வணிகம் செய்வதை எளிதாக்கும் அரசின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான படிவங்களையும் ஒற்றைச் சாளர முறையில் கிடைக்கச் செய்ய உதவும்.

மேலும் நாடு முழுவதிலும் உள்ளவர்கள் தேசிய மருந்து விலை நிர்ணைய ஒழுங்குமுறை ஆணையத்துடன் தொடர்பு கொள்ள காகிதம் இல்லா செயல்பாட்டையும் இது கொண்டிருக்கும்.


Next Story