திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணிக்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன: ஜெய்ராம் ரமேஷ்
மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கூட்டணியில் உள்ள சில கட்சிகளிடையே தொகுதி பங்கீடு விஷயத்தில் கருத்து வேறுபாடு எழ தொடங்கியது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால், மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார். அதேசமயம், இந்தியா கூட்டணியில் நீடிப்போம் என்றும் கூறினார். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.
"இந்தியா கூட்டணியில் இருப்பதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியிருப்பதால், பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறார். எனவே, கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூட்டணிக்கான கதவுகளை நாங்கள் மூடவில்லை. 42 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கிறார். இன்னும் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன, கூட்டணி கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் தேர்வு மற்றும் பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்து வருவதாகவும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.