ஊழல்வாதிகளை விட்டு விடாதீர்கள் - பிரதமர் மோடி பேச்சு


ஊழல்வாதிகளை விட்டு விடாதீர்கள் - பிரதமர் மோடி பேச்சு
x

ஊழல்வாதிகளை விட்டு விடாதீர்கள் என்று ஊழல் கண்காணிப்பு வார விழாவில் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஊழல் கண்காணிப்பு வார விழாவை நேற்று நடத்தியது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம், ஊழலற்ற இந்தியாவின் கனவுகள் மற்றும் அபிலாசைகளை நனவாக்கும் வகையில் நடைபெற்று வருகிறது.

இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு, நம்பிக்கை, நம்பகத்தன்மை ஆகியவை முக்கியமாக உள்ளன. ஊழல், சுரண்டல், வளங்களின் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றின் நீண்டகால அடிமைத்தன பாரம்பரியம், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு பலம் பெற்றது. இது இந்த நாட்டின் 4 தலைமுறையினரை பாதித்துள்ளது.

சுதந்திர நூற்றாண்டைக்காணப்போகிற காலத்தில் இந்த பல்லாண்டு கால பாதையை நாம் மாற்ற வேண்டும். ஊழல், மக்களின் முன்னேற்றத்தை தடுத்து விடுகிறது. ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு தங்கள் சக்தியை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கிறபோது, நாடு எப்படி முன்னேற முடியும்? எனவேதான், இதை மாற்றுவதற்கு கடந்த 8 ஆண்டுகளாக நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

வினியோகத்துக்கும், தேவைக்கும் இடையேயான இடைவெளியினை நிரப்ப நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதை அடைவதற்கு தொழில்நுட்ப முன்னேற்றம், அடிப்படை சேவைகளை செறிவூட்டுதல், சுயசார்பு ஆகிய 3 வழிகள் பின்பற்றப்பட்டன.

பொதுவினியோக முறையிலும் தொழில்நுட்பத்தை இணைத்துள்ளோம். கோடிக்கணக்கான போலி பயனாளிகளை அகற்றி உள்ளோம். நேரடி பண பரிமாற்ற திட்டம் மூலம் தவறான கைகளுக்கு போவதில் இருந்து ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை காக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஒளிவுமறைவற்ற டிஜிட்டல் பரிமாற்றம், அரசின் வெளிப்படையான கொள்முதல்முறை ஆகியவை மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளன.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு அனைவரையும் ஊக்குவிக்கிற ஒரு நிறுவனமாக ஊழல் கண்காணிப்பு ஆணையம் செயல்படுகிறது. ஊழல் கண்காணிப்பு அமைப்பினர், தங்கள் தணிக்கைகளை, ஆய்வுகளை நவீனமயமாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக அரசு காட்டும் விருப்பத்தை, அனைத்து துறைகளிலும் காண வேண்டியது அவசியம் ஆகும். வளர்ச்சி அடைந்த இந்தியாவில், ஊழலைப் பொறுத்துக் கொள்ளாத நிர்வாகச் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து முடிக்கிற அமைப்பினை உருவாக்க வேண்டும். கிரிமினல் வழக்குகளில் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். ஊழல் வழக்குகள் நிலுவை அடிப்படையில் துறைகளை வரிசைப்படுத்தி, மாதம்தோறும் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கையாக வெளியிடுவதற்கு ஒரு வழியை காண வேண்டும். தொழில்நுட்பத்தின் துணை கொண்டு, விசாரணைகளுக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஒப்புதல் அளிக்கும் செயல்முறையை கொண்டு வர வேண்டும். மக்களின் குறைகள் பற்றிய தரவுகளை தணிக்கை செய்ய வேண்டும். அப்பொழுதுதான், குறிப்பிட்ட துறையில் ஊழலுக்கான அடிப்படை காரணத்தை நாம் கண்டறிய முடியும்.

ஊழல் குறித்து பொதுமக்கள் உஷாராக இருக்கச்செய்ய வேண்டும். ஊழல்வாதிகள் எவ்வளவு பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும், எந்தச்சூழ்நிலையிலும் காப்பாற்றப்பட்டு விடக்கூடாது. ஊழல்கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகளின் கடமை இது. எந்தவொரு ஊழல்வாதியும் அரசியல், சமூக ஆதரவை பெற்றுவிடக்கூடாது. ஒவ்வொரு ஊழல்வாதியும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட வேண்டும். இந்த சூழ்நிலையை உருவாக்குவது அவசியம்.

ஊழல்வாதிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்று வந்தாலும்கூட அவர்கள் புகழப்படுவதை பல நேரங்களில் பார்க்கிறோம். இது இந்திய சமூகத்துக்கு நல்லதல்ல. ஊழல்கண்காணிப்பு ஆணையம்போன்ற அமைப்புகள் தற்காப்புக்காக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்தால், குற்றமனப்பாங்குடன் வாழ வேண்டியது வராது.

அரசியல் செயல் திட்டத்தில் நமக்கு வேலை இல்லை. ஆனால் நாட்டின் சாதாரண மக்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகளை நீக்குவது நமது கடமை ஆகும். தீய சக்திகள் கூக்குரலிடுவார்கள், அவர்கள், நிறுவனங்களை கழுத்தை நெரிக்க முயற்சிப்பார்கள், இந்த நிறுவனங்களில் அமர்ந்திருக்கும் அர்ப்பணிப்புள்ள மக்களை அவமதிக்க முயற்சிப்பார்கள். இது எல்லாம் நடக்கும்.

எனது அனுபவத்தை வைத்து சொல்கிறேன். நேர்மையின் பாதையில் நடைபோடுங்கள். உங்களுக்கான கடமையை செய்யுங்கள். மக்கள் உங்களோடு நிற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய அளவில் வளர்ச்சி அடையும் இந்தியாவில் ஊழல் இருக்கக்கூடாது என்ற பொருளில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் பரிசு வென்ற 5 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.


Next Story