நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம்


நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம்
x

பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை தீவிரமாக எடுத்துள்ள இந்திய மருத்துவ சங்கம் இன்று (சனிக்கிழமை) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி பெண் டாக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த பாலியல் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, சி.பி.ஐ. சிறப்பு விசாரணை குழுவினர் கொல்கத்தாவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதற்கிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் அந்த மருத்துவமனை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அந்த போராட்டம் வன்முைறயாக மாறியது. மருத்துவமனைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அந்த ஆஸ்பத்திரியை முழுமையாக சூறையாடினார்கள். டாக்டர்களின் இருக்கைகள், கருவிகள், கண்ணாடி ஜன்னல்கள், படுக்கைகள் அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன.

இதனால் போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைக்க நேரிட்டது. ஆஸ்பத்திரியை சூறையாடியதாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையான குற்றவாளிகளை திரிணாமுல் காங்கிரஸ் மறைப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜியும் , மருத்துவ மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை தீவிரமாக எடுத்துள்ள இந்திய மருத்துவ சங்கம் இன்று (சனிக்கிழமை) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.இதனால் வழக்கமான புறநோயாளிகள் பிரிவு மூடப்படும். விருப்பு அறுவை சிகிச்சை பணிகள் நடைபெறாது. அதேநேரம் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல இயங்கும். இவ்வாறு இந்திய மருத்துவ சங்கம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.


Next Story