பெண் டாக்டர் கொலை: விசாரணையை தொடங்கிய தேசிய மகளிர் ஆணையக் குழு


பெண் டாக்டர் கொலை: விசாரணையை தொடங்கிய தேசிய மகளிர் ஆணையக் குழு
x

கொலை வழக்கு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய மகளிர் ஆணையம் கொல்கத்தா சென்றுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் ஒருவர் கடந்த 9-ம் தேதி காலையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த அவர், 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்தார். கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்தவர்களும் இருக்கக்கூடும் என சக டாக்டர்கள் மற்றும் கொல்லப்பட்ட டாக்டரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரியும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டாக்டர்கள் போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிந்ததால், இன்றும் டாக்டர்களின் போராட்டம் தொடருகிறது.

இதனிடையே கொல்லப்பட்ட பெண் டாக்டரின் வீட்டுக்கு சென்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அங்கு அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கின் மர்மத்தை விலக்க 18-ம் தேதி வரை போலீசாருக்கு கெடு விதித்தார். இதனிடையே இளம் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி பி ஐ விசாரணை கேட்டு கொல்கத்தா ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்ட்டது.

பெண் மருத்துவர் பாலியல் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ள நிலையில், இந்த கொலை வழக்கு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்தை சேர்ந்த இரண்டு பேர் கொண்ட குழுவினர், சம்பவம் நிகழ்ந்த ஆர்ஜி கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கொல்கத்தா காவல்துறையின் தலைமையகத்தில் விசாரணை அதிகாரிகளை அவர்கள் சந்தித்தனர்.


Next Story