தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசியபோது குறுக்கிட்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன் - மக்களவையில் நடந்தது என்ன?


தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசியபோது குறுக்கிட்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன் - மக்களவையில் நடந்தது என்ன?
x
தினத்தந்தி 6 Feb 2024 2:02 PM IST (Updated: 6 Feb 2024 2:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரணம் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டினார்.

டெல்லி,

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கனமழை பெய்தது. கனமழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி வழங்கவில்லை என்று தமிழக அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

இதனிடையே, நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரணம் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு மத்திய உள்துறை இணைமந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.

வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக டி.ஆர்.பாலு பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன் எம்.பி. டி.ஆர். பாலுவின் பேச்சுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த எம்.பி. டி.ஆர். பாலு, என்ன பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள்? தயவு செய்து அமருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? சபாநாயகர் தயவு செய்து குறுக்கிட வேண்டும். இந்த மந்திரி ஏன் குறுக்கீடு செய்கிறார். இந்த மந்திரி சில ஒழுக்க நெறிகளை தெரிந்திருக்க வேண்டும். எம்.பி.யாக இருக்க நீங்கள் தகுதியற்றவர். தயவு செய்து அமருங்கள். நீங்கள் மத்திய இணை மந்திரியாக இருக்கவும் தகுதியற்றவர். விவாதத்தில் பங்கேற்க உங்களுக்கு தைரியம் இல்லை தயவு செய்து அமருங்கள்' என்றார்.

இதனை தொடர்ந்து மத்திய இணை மந்திரியை தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு அவமதித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி பா.ஜ.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், தி.மு.க. , பா.ஜ.க. எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளியேறினர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு கூறுகையில், மக்களவையில் பட்டியலின மந்திரியை அவமதித்துவிட்டதாக பா.ஜ.க.வினர் சித்தரித்து பேசுகின்றனர். மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ளபாதிப்பு, நிவாரண நிதி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினேன். என்னை கேள்வி கேட்க விடாமல் மத்திய இணை மந்திரி எல்.முருகன் குறுக்கிட்டார். ஒரு தமிழர் என்ற முறையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செயல்படவில்லை' என்றார்.

முன்னதாக, டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து, டி.ஆர்.பாலுவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.


Next Story