டி.ஆர்.பாலு பேசும்போது குறுக்கிட்டது ஏன்? மத்திய இணை மந்திரி எல்.முருகன் விளக்கம்


டி.ஆர்.பாலு பேசும்போது குறுக்கிட்டது ஏன்? மத்திய இணை மந்திரி எல்.முருகன் விளக்கம்
x
தினத்தந்தி 6 Feb 2024 3:13 PM IST (Updated: 6 Feb 2024 5:49 PM IST)
t-max-icont-min-icon

மக்களவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை தி.மு.க. எம்.பி டி.ஆர்.பாலு பயன்படுத்தினார் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத் தொடர் இதுவாகும். ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். கடந்த 1-ந் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு பதில் அளித்து, பிரதமர் மோடி நேற்று பேசினார்.பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் வழக்கம் போல் அலுவல்கள் நடைபெற்று வந்தன.

மக்களவையில் கேள்வி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரணம் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு மத்திய உள்துறை இணைமந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன், டி.ஆர். பாலுவின் பேச்சுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேசினார். இதற்கு டி.ஆர்.பாலு கடும் ஆட்சேபம் தெரிவித்து ஆவேசமாக பேசினார். டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.பிக்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், மக்களவையில் தன்னை பார்த்து டி.ஆர்.பாலு பேசியது என்ன என்பது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். எல்.முருகன் கூறியதாவது: மக்களவையில் வெள்ளபாதிப்பு குறித்து திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார். இதனால், அவையில் நான் குறுக்கிட்டேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, அன்ஃபிட் என்று அவர் தெரிவித்ததன் மூலம், திமுகவினரின் நிலையை உணர முடிகிறது சமூக நீதியில் தி.மு.கவிற்கு நம்பிக்கையில்லை. பட்டியலினத்தவர் எம்.பி, மந்திரி ஆவதை திமுக விரும்பவில்லை என்பதையே டி.ஆர்.பாலுவின் பேச்சு காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story