சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுகொடுக்க மறுக்கும் டி.கே.சிவக்குமார்
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆகிறது. ஆனால் கர்நாடகத்தின் அடுத்த முதல்-மந்திரி யார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா இடையிலான அதிகார போட்டி தான் காரணம் என்றால் மிகையல்ல.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அப்போது சித்தராமையா எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு வகித்தார். கூட்டணி ஆட்சி அமைந்ததும் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. இதனால் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து மாநில தலைவர் பதவியை, தனது ஆதரவாளரான தினேஷ் குண்டுராவுக்கு சித்தராமையா வாங்கிக் கொடுத்தார். ஆனால் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசில் கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படு தோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து சித்தராமையா தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை. அவரையே அந்த பதவியில் தொடர கேட்டுக்கொண்டது.
அதுபோல் மாநில தலைவராக இருந்த தினேஷ் குண்டுராவ் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று பதவி விலகினார். இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமாரை
நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. அப்போது சித்தராமையா, கட்சியில் தனது முக்கியத்துவம் கருதி தடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையும் மீறி டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் சித்தராமையா- டி.ேக.சிவக்குமார் இடையே பூசல் தொடர்ந்தது. மாநில தலைவரான டி.கே.சிவக்குமாரை, சித்தராமையா தன்னிச்சையாக செயல்பட விடாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இருவரும் கட்சி நிகழ்ச்சிகளிலும், பொது வெளியிலும் தாங்கள் ஒற்றுமையாக இருப்பது போலவே காட்டி வந்தனர். இதற்கிடையே கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வந்ததை தொடர்ந்து இருவரும் அந்நியோன்மாக இருப்பது போல் நெருக்கம் காட்டினர். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் இல்லை என்ற வகையில் இருவரும் கைகோர்த்து செயல்பட்டதாக சொல்லப்பட்டது. மேலும் இருவரும் கூட்டாக சேர்ந்து புகைப்படம் எடுத்து அதனை தேர்தல் பிரசார சமயத்தில் சமூகவலைத்தளங்களில் பரப்பினர். இவ்வாறாக தாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக வெளிக்காட்டிக் கொண்டனர்.
மேலும் காங்கிரஸ் வெற்றிக்காக இருவரும் தனித்தனி வழியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். டி.கே.சிவக்குமார் தென்கர்நாடக பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். சித்தராமையா வடகர்நாடக பகுதிகளில் ஓட்டு வேட்டையாடினார். இவர்களுக்கு மத்தியில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்தனர்.
இதில் பா.ஜனதா அரசின் ஊழல், முறைகேடுகளை முன்னிறுத்தியும், காங்கிரசின் 5 உத்தரவாத திட்டங்களை கூறியும் ஓட்டு சேகரித்தனர். இதன் பலனாக யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
தேர்தல் முடிவு வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் ஆகிறது. ஆனால் இன்னும் முதல்-மந்திரி யார் என்பதை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியை நான் தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு பலப்படுத்தி, இன்று சட்டசபை தேர்தலில் வெற்றி அடைய செய்திருப்பதாகவும், எனவே எனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் டி.கே.சிவக்குமார் போர்க்ெகாடி தூக்கியுள்ளார். ஆனால் மூத்த தலைவரான சித்தராமையா, தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது மேற்கொண்ட நடவடிக்கையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெறுபவரை முதல்-மந்திரி ஆக்கியது போல் தற்போது தன்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனால் இரு தலைவர்களின் பலம், பலவீனத்தை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அலசி ஆராய்ந்தனர். இதில் சித்தராமையாவை முதல்-மந்திரி ஆக்கினால், ஆட்சியில் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் பிரச்சினை செய்யாமல் இருப்பார்கள் என்றும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு சித்தராமையா பதிலடி கொடுப்பார் என்றும், இது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருக்கும் என்றும் கட்சி மேலிடம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு டி.கே.சிவக்குமார் ஒப்புக்கொள்ளவில்லை. என்னால் தான் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. எனது பின்னால் 135 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். எனவே கட்சிக்கு உழைத்த எனக்கு கட்சி மேலிடம் நல்ல பலனை வழங்கும் என கூறினார். இதனால் இருவரையும் டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது.
முதல் ஆளாய், சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் விமானத்தில் கடந்த திங்கட்கிழமை மதியம் டெல்லி பறந்தார். ஆனால் டி.கே.சிவக்குமார் டெல்லி செல்லாமல் காலம் தாமதம் செய்து வந்தார். பின்னர் மேலிட தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று நேற்று முன்தினம் காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது நிருபர்களிடம் கூறிய அவர், காங்கிரஸ் கட்சி எனக்கு கடவுள், கோவில் போன்றது. எனக்கு கட்சி தான் தாய். தாய் குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து வழங்கும் என்று பொடிவைத்து கருத்தை தெரிவித்தார்.
இதற்கிடையே சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேைவ திங்கட்கிழமை இரவே சந்தித்து முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை விளக்கி இருந்தார். இதனால் நேற்று முன்தினம் மல்லிகார்ஜுன கார்கேவை டி.கே.சிவக்குமார் சுமார் 45 நிமிடம் சந்தித்து பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி மாநில தலைவருக்கு தான் தேர்தலில் வெற்றி பெற்றதும், முதல்-மந்திரி பதவி வழங்கப்படுகிறது. அதுபோல் எனக்கு தான் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கட்சி எப்படி இருந்தது, தான் மாநில தலைவராக பொறுப்பு ஏற்றபிறகு கட்சியை பலப்படுத்தி சட்டசபை தேர்தலில் 135 இடங்களை பெற அயராது உழைத்துள்ளேன். உழைப்புக்கு ஏற்ற ஊதியமாக
முதல்-மந்திரி பதவியை தாருங்கள் என பிடிவாதமாக கூறினார்.
இதையடுத்து 2-வது முறையாக சித்தராமையாவை, கார்கே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா தனக்கே முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருப்பதாகவும் கூறினார். இருவரிடமும் தனித்தனியாக ஆலோசித்த கார்கே, முதல்-மந்திரி பதவியை இருவரும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ளவும், முதல் 2½ ஆண்டு சித்தராமையாவும், அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவியை வகிக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறினார். ஆனால் இருவருமே இந்த பங்கீட்டு நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் நாங்களே 5 ஆண்டுக்கு முதல்-மந்திரி பதவி வகிப்போம் என்று திட்டவட்டமாக கூறினர்.
இதனால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து இந்த பஞ்சாயத்து, முன்னாள் தலைவரான ராகுல்காந்தியிடம் சென்றது. அதன்படி ராகுல்காந்தி நேற்று டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ராகுல்காந்தி, சித்தராமையா எடுத்துவைத்த வாதத்தை ஆமோதித்ததாகவும் தெரிகிறது. ஆனால் முதல்-மந்திரி விவகாரத்தில் ராகுல்காந்தி கூறிய தலா 2½ ஆண்டுகள் நிர்வாக பங்கீட்டை டி.கே.சிவக்குமார் ஏற்க மறுத்தார். தனக்கே முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். குறிப்பாக ராகுல்காந்தி, சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவும், டி.கே.சிவக்குமாரை சமாதானப்படுத்தும் வகையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது. ஆனால் அதற்கு டி.கே.சிவக்குமார் தனது முடிவில் திட்டவட்டமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்துக்கு சென்ற டி.கே.சிவக்குமார், முதல்-மந்திரி விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டி.கே.சிவக்குமார் தனக்கு 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி தாருங்கள். இல்லையெனில் நீங்களே (கார்கே) முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறி, சித்தராமையாவுக்கு எக்காரணம் கொண்டும் முதல்-மந்திரி பதவி வழங்க கூடாது என கடும் எதிர்ப்பை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் முதல்-மந்திரி யார் என்பதை அறிவிக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. அதாவது, தேர்தலுக்கு முன்பு சித்தராமையா தன்னை எப்படி எல்லாம் ஆட்டிபடைத்தாரோ அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கூடாது என முட்டுக்கட்டை போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பூசலை மறைத்து தேர்தலின் போது கைகோர்த்து செயல்பட்ட கை தலைவர்கள் இடையே முதல்-மந்திரி நாற்காலி விஷயத்தில் பகிரங்க மோதலில் ஈடுபட்டு இருப்பது காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.