சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன்


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன்
x

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் காங்கிரஸ் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டில் இருந்து ரூ.8.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் வருமான வரி துறையினர் கொடுத்த தகவலின்பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவரை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.


இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக டெல்லி சிறப்பு கோர்ட்டில் டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்களான சச்சின் நாராயண், சுனில்குமார் சர்மா, டெல்லியில் உள்ள கர்நாடக பவன் ஊழியர் ஆஞ்சநேயா, ராஜேந்திரா ஆகியோர் மீது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து தொடங்கும் என்றும், டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.கே.சிவக்குமாரின் உடல்நலக்குறைவை காரணம் காட்டி அவரது வக்கீல் தயாகிருஷ்ணன், டெல்லி கோர்ட்டில் டி.கே.சிவக்குமாருக்கு இடைக்கால ஜாமீன் வாங்கி இருந்தார். மேலும் டி.கே.சிவக்குமாருக்கு இடைக்கால ஜாமீனை ரத்து செய்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வக்கீல் தயாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்து இருந்தார். அதுபோல மற்ற 4 பேரின் சார்பிலும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.


இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி விகாஸ் துல் முன்னிலையில் நடந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேரும் செல்வாக்கு மிக்கவர்கள் என்று கூறியதுடன், அவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை அழித்து விட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். அப்போது டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல் தயா கிருஷ்ணன் தனது மனுதாரர் தற்போது எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருப்பதாகவும், அதனால் அவர் ஆதாரத்தை அழிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறி வாதிட்டார்.


அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் 5 பேரும் தலா ரூ.1 லட்சம் பிணைய தொகை செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.


Next Story