அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு


அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு
x

அரசு குத்தகை சொத்துகளின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான வணிக வளாகம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அதை இடித்து விட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அங்கு கடை நடத்தி வந்த அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், கட்டிடம் சேதமடையவில்லை என்றும், முறையாக வாடகை செலுத்தி வருவதால் கடைகளை காலி செய்யக் கூறி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியிருந்தனர். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒசூர் சார் ஆட்சியர் தரப்பில், மனுதாரர்கள் இருவரும் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக கடை நடத்தி வருவதாகவும், அவர்கள் முறையாக வாடகை செலுத்துவதில்லை என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல. மனுதாரர்கள் இருவரும் சட்டவிரோதமாக 30 ஆண்டுகள் கடைகளை நடத்தி வருவதால், சார் ஆட்சியர் அனுப்பிய நோட்டீஸில் எந்தப் பிழையும் இல்லை" எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், "அரசு வருவாயை பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. குத்தகை சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story