விமான போக்குவரத்து இயக்குநரகம் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது: மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா


விமான போக்குவரத்து இயக்குநரகம் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது: மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா
x

விமான நிறுவனங்கள் உயர்ந்த பாதுகாப்பு தரத்தை பராமரிப்பதை உறுதி செய்ய நடவடிக்கையை எடுக்க எம்.பி பிரியங்கா சதுர்வேதி கோரினார்.

புதுடெல்லி,

ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்றில் கடந்த 12ஆம் தேதி, கேபினில் புகை காணப்பட்டதால் அந்த விமானம் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதில் இருந்த 86 பேர் அவசரகால வழி மூலம் வெளியே இறங்கினர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது 'என்ஜினில் உள்ள எண்ணெய், விமானத்தின் குளிர்சாதன(ஏ.சி) அமைப்பில் நுழைந்து, கேபினில் புகையை உண்டாக்குகிறது' என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாநிலங்களவை எம்.பி பிரியங்கா சதுர்வேதி, அக்டோபர் 14 அன்று சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிம எழுதினார். அந்த கடிதத்தில், விமான நிறுவனங்கள் மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை பராமரிப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க கோரினார்.

அந்த கடிதத்திற்கு அளித்த பதிலில் மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருப்பதாவது;-

இந்த நிதியாண்டில் இதுவரை 202 கண்காணிப்பு ஆய்வுகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) முடித்துள்ளது.எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் தவிர்க்க டிஜிசிஏ அனைத்து தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்கும்.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டிஜிசிஏ, விமான நடவடிக்கைகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, விமான நடவடிக்கைகளின் பாதுகாப்பை மேம்படுத்த பல முன்முயற்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பல்வேறு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக, டிஜிசிஏ மேலும் 59 சம்பவ இடத்தில்(ஸ்பாட்) சோதனைகளை ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் நடத்தியது.2019-20 ஆண்டில் இந்த விமானங்களில் மொத்தம் 155 கண்காணிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2022-23ஆம் ஆண்டில், இதுவரை 202 கண்காணிப்பு ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தை வலுப்படுத்தவும் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதன் பாதுகாப்பு மேற்பார்வை நடவடிக்கைகளை மேம்படுத்த வசதியாக அதிக எண்ணிக்கையிலான பதவிகளை விமான போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கும்.

விமான நிறுவனத்தால் பாதுகாப்பு தரநிலைகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய டிஜிசிஏ தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.விதிமீறல்கள் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உறுதி செய்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story