எதிர்க்கட்சிகளிடையே நிலவுவது குடும்பச்சண்டைதான்- துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா
எதிர்க்கட்சிகளிடையே தற்போது நிலவுவது குடும்பச்சண்டைதான், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் இதை சரி செய்து விடுவோம் என துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வேட்பாளர் ஆல்வா
நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் சார்பில் ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், மார்கரெட் ஆல்வாவை நிறுத்துவது தொடர்பாக தங்களை கலந்து ஆலோசிக்காததால் இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
கெஜ்ரிவாலுடன் சந்திப்பு
ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரான டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை மார்கரெட் ஆல்வா நேற்று சந்தித்து, அவரது கட்சியின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு விரைவில் சந்தித்து முடிவு எடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
'குடும்பச்சண்டைதான்'
இந்த தருணத்தில் மார்கரெட் ஆல்வா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் இடையே தற்போது நிலவுவது குடும்பச்சண்டைதான். இதை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் சரிசெய்து, ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
ஒரு கட்சி ஆட்சியை விரும்பவில்லை என்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாக உள்ளன. அரசியல் சாசனமும், ஜனநாயக அமைப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஜனநாயக சோகம்
இன்றைய ஜனநாயக அமைப்பின் சோகம், மக்களின் கட்டளை மேலோங்கி இருக்கவில்லை. உடல் பலமும், பண பலமும், அச்சுறுத்தல்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த கட்டமைப்பின் அமைப்பை மாற்றுகின்றன.
நாடாளுமன்றத்தில் அடிக்கடி அமளிகள் நேரிடுகின்றன. இதன் காரணம், சபையை வழிநடத்துபவர் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை பரிசீலிப்பதில் சமரசம் செய்து கொள்ள இயல்வதில்லை.
நான் சொல்வதே வழி, இல்லையேல் வழி இல்லை என்பதே அரசின் கோஷமாகி விடுகிறபோது, ஜனநாயகம் எப்படி செயல்பட முடியும்?
வாரிசு அரசியல்
வாரிசு அரசியல் பற்றி கேட்கிறீர்கள். அரசியல்வாதிகளின் வாரிசுகள், அரசியலுக்கு வருவது தவறில்லை. ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று, மக்களின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும்.
துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வருவதில் மம்தாதான் முன்னணியில் நின்றார்.
வேறு வழியில்லை. அவர் பா.ஜ.க. வெற்றிக்கு உதவ முடியும். ஆனால் மம்தா தனது முடிவை மாற்றிக்கொள்வதற்கு போதுமான கால அவகாசம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.